வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (21/09/2017)

கடைசி தொடர்பு:01:00 (21/09/2017)

பாளையங்கோட்டையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தசரா சப்பரங்கள் அணிவகுப்பு!

பாளையங்கோட்டையில் பக்தர்கள் தரிசனத்துக்காக அம்மன் கோயில்களில் இருந்து தசரா சப்பரங்கள் அணிவகுத்து பக்தர்களைப் பரவசப்படுத்தின. அக்டோபர் 1-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

தசரா விழா

மைசூர், குலசேகரப்பட்டனம் போன்று பாளையங்கோட்டையில் தசரா திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். 10 நாள்கள் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழா பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் 19-ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துச்செல்வி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் பந்தல்கால் நாட்டப்பட்டு தொடங்கியது.

சப்பரங்கள்

அதனைத் தொடர்ந்து, ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சிமாகாளி, கிழக்கு, வழக்கு உச்சிமாகாளி, விஸ்வகர்மா உச்சிமாகாளி, புத்துப்பேட்டை உலகம்மன், புதுஉலகம்மன், சமாதானபுரம் மாரியம்மன், பேராத்துச்செல்வி அம்மன் ஆகிய அம்மன் கோயிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வந்த அம்பாள் ராஜகோபாலசாமி கோயில் திடலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

விஜயதசமியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி 12 அம்மன் கோயில்களில் இருந்தும் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலாவாக வரும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி, பாளையங்கோட்டை ராசாமி கோயில் திடல், ராஜகோபாலசாமி கோயில் திடல் வழியாக வரும் சப்பரங்கள் மார்க்கெட் ஜவஹர் திடலில் அணிவகுத்து நிறுத்தப்படும். பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு மாரியம்மன் கோயில் திடலில் ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தசரா விழாக் குழுவினர் செய்துள்ளனர்.