’முதல்வர் நீராடியதால் காவிரி அழுக்காகி விட்டது’ - எடப்பாடியைச் சாடும் நாஞ்சில் சம்பத்! | Cauvery becomes dirty as chief minister took bath in the sacred river, says Nanjil Sampath

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (21/09/2017)

கடைசி தொடர்பு:00:00 (21/09/2017)

’முதல்வர் நீராடியதால் காவிரி அழுக்காகி விட்டது’ - எடப்பாடியைச் சாடும் நாஞ்சில் சம்பத்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீராடியதால் காவிரி அழுக்காகிவிட்டது என்று தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க அம்மா அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருப்பவர், நாஞ்சில் சம்பத். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுழன்று பேசி வருகிறார். அவர் தனது பேச்சாற்றலால் கட்சியினரைக் கவர்ந்து இழுக்கும் நிலையில் நெல்லையில் இன்று நடக்கவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்காக நெல்லைக்கு வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ’’18 எம்.எல்.ஏ-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நல்ல முடிவை அறிவித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் மூலம் நியாயம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகள் காப்பாற்றப்பட்டு உள்ளன. இந்தத் தீர்ப்பின் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களைத் தவிர்த்து விட்டு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகியாக மாறி விட்டார். நாற்காலி கனவால் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். நீதியை நீண்ட நாள்களுக்கு மறைக்க முடியாது. துரோகத்தால் நியாயத்தை வென்றதாக சரித்திரம் கிடையாது. தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியில் நீராடி இருக்கிறார். அவர் செய்த துரோகத்தை எந்த தீர்த்தத்தில் நீராடினாலும் தீர்க்க முடியாது. அவர் நீராடியதால் காவிரி அழுக்காகி விட்டது. 

மிகப்பெரிய மாநிலமான தமிழகத்துக்கு நிரந்தரக் கவர்னரை நியமிக்காமல் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. தற்போதைய பொறுப்பு கவர்னர், மத்திய அரசு சொல்வதை மட்டுமே செயல்படுத்தி வருகிறார். ’தமிழக அரசின் சார்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து இருப்பதை நான் வழிமொழிகிறேன். காரணம், அந்தப் பொதுக்கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பற்றியும் அவரது புகழுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் எதையும் பேசுவதில்லை என்பது உண்மை. அப்படியானால், மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது தானே?’’ என்றார் நாஞ்சில் சம்பத்.