வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (21/09/2017)

கடைசி தொடர்பு:08:43 (21/09/2017)

திருப்பூரில் மீண்டும் துவங்கிய டாஸ்மாக் போராட்டம்!

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெடுஞ்சாலைகளில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு டாஸ்மாக் அதிகாரிகள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளானார்கள். நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகள் போட்ட திட்டம், மிகப்பெரும் எதிர்விளைவை உண்டாக்கியது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிராக மக்களின் போராட்டம் வெடித்து, ஆங்காங்கே மதுக்கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.

இந்த டாஸ்மாக் போராட்டங்களில், திருப்பூர் மக்களின் கை ஒருபடி ஓங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களால், தூக்கமின்றித் தவித்தார்கள் டாஸ்மாக் அதிகாரிகள். அனுதினமும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த டாஸ்மாக் போராட்டங்கள், கடந்த சில மாதங்களாக சற்று குறைந்துபோய் காணப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மிகப்பெரும் இடையூறாக இருப்பதாகக் கூறி, திருப்பூரில் மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள் பொதுமக்கள்.

திருப்பூர் மாநகரப் பகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் என்னும் இடத்தில், அடுத்தடுத்து செயல்பட்டுவரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவருவதாகவும், திருப்பூரிலிருந்து அவிநாசி செல்லும் மிக முக்கிய சாலையை ஒட்டி செயல்பட்டுவரும் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு, வரும் குடிமகன்களின் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்துவருவதாகவும் கூறப்படுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள், மாலை நேரத்தில் இப்பகுதியைக் கடக்கவே மிகவும் அச்சப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, சம்பந்தப்பட்ட இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக அப்பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.