வெளியிடப்பட்ட நேரம்: 01:29 (21/09/2017)

கடைசி தொடர்பு:08:31 (21/09/2017)

மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு – புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், ஐ.ஏ.எஸ் அதிகாரி, தனியார் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில், ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இதிலிருக்கும் எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இந்த வருடம், தனியார் கல்லூரிகளில் இருந்த 95 முதுநிலை மருத்துவ இடங்களை, சென்டாக் கலந்தாய்வுமூலம் நடத்தாமல், 'அதிகப் பணம் பெற்றுக்கொண்டு தனியார் கல்லூரிகள் மோசடியாக நிரப்பிவிட்டன' என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அது தொடர்பான ஆவணங்களை இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு போன்றவைகளுக்கு அனுப்பிவைத்தார். அதையடுத்து நடைபெற்ற விசாரணையில், முறைகேடுகள் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதால், 95 மாணவர்களின் சேர்க்கையை ரத்துசெய்தது எம்.சி.ஐ.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில், சென்டாக் குழுவின் தலைவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நரேந்திரக் குமார், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ராமன், சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் பி.ஆர்.பாபு, சென்டாக் கன்வீனர் டாக்டர் கோவிந்தராஜ், சென்டாக் துணை கன்வீனர் டாக்டர் பழனிராஜா, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜோனாதன் டேனியல் மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ராஜகோபாலன், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கணேசன், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியின் (காரைக்கால்) பதிவாளர் பொன்னியின் செல்வன், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அன்பு (எ) அன்பழகன், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் தனசேகரன், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியின் பதிவாளர் டாக்டர் அனில் ஜேக்கோப், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரி சுகாதாரத்துறையின் இயக்குநர் ராமன் வீட்டில் அதிரடி ரெய்டை மேற்கொண்ட சி.பி.ஐ, பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க