’பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு’- வெற்றிமாறன் நெகிழ்ச்சி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத காலம் பரோலில் வந்துள்ள பேரறிவாளனை, அவரது இல்லத்தில் இன்று இயக்குநர் வெற்றிமாறன் சந்தித்தார்.

வெற்றிமாறன்

ராஜீவ் கொலைக் குற்றத்துக்காக, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தார். அவரது தந்தை ஞானசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க, தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்துள்ள அவரைப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் நேரில் சந்தித்துப் பேசிவருகின்றனர்.

 இன்று காலை, பேரறிவாளனை திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த வெற்றிமாறன், “26 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ள பேரறிவாளனின் பரோல் என்பது தீர்வுக்கான முதல் படியாகவே பார்க்கிறேன். பரோல் மேலும் நீட்டிக்கப்பட்டால், பேரறிவாளன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நிரந்தர விடுதலை கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மேலும், பேரறிவாளன்குறித்து திரைப்படம் எடுக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, “பேரறிவாளனின் வாழ்க்கைப் பயணத்தைத் திரைப்படமாக எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனென்றால், அது பேரறிவாளன் என்ற ஒருவரின் வாழ்க்கையாக இருக்காது. அது ஓர் இனத்தின் வரலாறாக இருக்கும். அதனால், திரைப்படம் சாத்தியமில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!