ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி திருவிழா - கொலு பொம்மைகள் அணிவகுப்பு

நவராத்திரி கொழு அணி வரிசை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நவராத்திரி திருவிழா திருகாப்பிடலுடன் தொடங்கியது. இதையொட்டி முதல் நாளான இன்று பர்வதவர்த்தினி அம்மன் அன்னபூரணி திருக்கோலத்தில் காட்சியளித்தார். அம்மன் கோயில்களில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் சிறப்புடன் நடப்பது வழக்கம். இதையொட்டி கோயில்கள், பக்தர்களின் இல்லங்களில் கொலுபொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று மாலை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருக்கோயிலின் அம்மன் சந்நிதியில் சிறப்பு அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பர்வதவர்த்தினி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

நவராத்திரியின் முதல் நாளான இன்று பர்வதவர்த்தினி அம்மன் பசி, பிணி நீக்கும் திருக்கோலமான அன்னபூரணி கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அம்மனுக்கு அருகில் நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு திருக்கோயிலின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், அம்மனின் முன்பாக திரிசங்கு சக்கர பூஜை நடந்தது. இதில் மஞ்சள், மா பொடிகள் கொண்டும் பால், பன்னீர், திரவியபொடிகள் கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இனிவரும் நாள்களில் மகாலெட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி, கெளரி சிவபூஜை, சாரதாம்பிகை, கெஜலெட்சுமி, மஹிஷாசுரமர்த்தினி, துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி என நவகோலங்களில் பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நவராத்திரியின் முதல் நாளான இன்று நடந்த சக்கர பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!