'கெஜ்ரிவாலைச் சந்தித்தது ஏன்?' - கமல்ஹாசன் விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாகக் கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

கெஜ்ரிவால் - கமல்ஹாசன்


இந்நிலையில், சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்ஹாசன் சந்தித்துப் பேசினர். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கமல்ஹாசன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது கமல் கூறுகையில், "கெஜ்ரிவால் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதே எனது பாக்கியம்தான். நாங்கள் சந்தித்துப் பேசியதை உங்களால் யூகிக்க முடியும். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்தவகையில் இந்த உறவு தொடர்கிறது. எனது தந்தை இருந்தபோது, இந்த வீடு அரசியல் தொடர்புடன் இருந்தது. அதை நான் ஓரத்தில் இருந்து கவனத்திருக்கிறேன். 

ஊழலுக்கு எதிராக நீண்ட காலமாகவே கெஜ்ரிவால் போராடி வருகிறார். ஊழல் மற்றும் மதவாதத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவருமே எனக்கு உறவினர்கள்தான். கெஜ்ரிவால் உடனான இந்தச் சந்திப்பு எனக்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவியது" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!