வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (22/09/2017)

கடைசி தொடர்பு:10:12 (22/09/2017)

இரவுகளில் பாலாற்றில் மணல் கொள்ளை..! நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி #SpotVisit

ரு தாய் எப்படி தன் வயிற்றில் சிசுவைப் பாதுகாக்கிறாளோ அதுபோலவே ஆறுகளும் தன்னுடைய மணல் வயிற்றினுள் நீரைப் பாதுகாத்து கால்வாய்களிலும், ஊற்றுகளிலும், ஏரிகளிலும் பிரசவித்து வந்தது. கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்னும் பகுதியிலிருந்து உற்பத்தியாகி ஆந்திராவில் 33 கி.மீ. பயணித்து தமிழகத்திற்கு தனது வருகையைப் பதிவு செய்கிறது பாலாறு. தமிழகத்தில் 222 கி.மீ. தூரத்தைக் கடந்து கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் பகுதியில் கடலில் கலக்கின்றது. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலாறுதான் வட தமிழகத்தின் மிகப்பெரிய நீராதாரம். இருகரைகளிலும் நுரைத் ததும்ப வெள்ளம் பாய்தோடிய பாலாறு வறண்டப் பாலாறாக மாறிப்போனது சோகத்தின் உச்சம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமும் இந்தப் பாலாறுதான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 ஏரி குளங்கள் இருந்திருக்கின்றன. கடந்த 1998-ம் ஆண்டு பெய்த மழையில்தான் பெரிய அளவில் வெள்ளம் சென்றிருக்கிறது. 2005-ம் ஆண்டு பெய்த மழையிலும், 2015-ம் ஆண்டு பெய்த மழையிலும் வெள்ளப் பெருக்கைக் கண்டது, இந்தப் பாலாறு. 

பரிதாபமான பாலாறு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அரசு மணல் குவாரிகளில் விதிகளுக்குப் புறம்பாக 30 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணல் அள்ளப்பட்டது. இதற்கு காவல்துறை, வருவாய், பொதுப்பணித்துறை எனப் பல துறை அதிகாரிகளும் துணையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நேற்று, செங்கல்பட்டை அடுத்த நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போது 300 அடி நீளத்துக்கு மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இப்போது பாலாற்றில் மணல் அள்ள அனுமதி இல்லையே என்ற கேள்வியுடன் பாலாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதனிடம் பேசினோம். 

அமுதன்“மணல் கொள்ளை நடக்கிறது. இரவு நேரத்தில், மாட்டு வண்டியில் கொண்டு வந்து ஊருக்குள் கொட்டிவிடுவார்கள். அதை சாக்கில் பிடித்து விற்பனை செய்கிறார்கள். அந்தந்த ஊரில் இருக்கும் அதிகாரமிக்க ஆட்களின் ஒத்துழைப்புடன் இது நடக்கிறது. காவல்துறை அதிகாரிகளையும் கவனித்து விடுவதால் மணல் கொள்ளையர்களுக்கு பிரச்சனையில்லை. 2012-ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியராக இருந்த சித்திரசேனன் மணல் அள்ளுவது தொடர்பான பிரச்சனையால்தான் மாற்றப்பட்டார். அந்தப் பிரச்சனையிலிருந்து எல்லோரும் தப்பிக்க மாவட்ட ஆட்சியரைச் சிக்க வைத்து விட்டார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால், அரசாங்கமே பலிகொடுத்து அவ்விஷயத்தில் தப்பித்துக் கொண்டது. பாலாற்றில் இன்னும் அரசாங்கத்தின் உதவியோடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்பூர்வமாக எந்த அனுமதியும் இங்கு இல்லை. ஆனால் சட்ட விரோதமாக மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெங்கட்ராமபுரம், பழைய சீவரம் என எங்கெங்கு மணல் இருக்கிறதோ அங்கெல்லாம் திருட்டு மணல் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மணல் என்பது வெறும் வீடு கட்டுவதற்கான ஆதாரம் மட்டுமல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தூய்மையான தண்ணீரைக் கொடுக்கக்கூடிய சாதனம். அந்தக் கோணத்தில் இங்கு யாருமே அணுகுவது இல்லை. இன்று பத்து நாளுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது. இதற்கெல்லாம் மணல் அதிகமாகக் கடத்தப்படுவதுதான் காரணம்.முறையாக மணலை அள்ளும்போதே குறைவாக அள்ளியிருந்தால் இப்போது இப்பிரச்சனை வந்திருக்காது. பொதுப்பணித்துறை, அரசாங்கம், அதிகாரிகள் என எல்லோருமே பணத்தை மட்டுமே பிரதான ஒன்றாகக் கருதுகிறார்கள். இது இயற்கையின் தன்மையை நிச்சயமாகச் சீர்குலைக்கும். காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் வரைக்கும் கூட இதற்குத் தொடர்பு உண்டு. நாங்களும் இதற்காகப் போராட்டம், கூட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பாலாற்றில் நடக்கும் அநியாயத்தை மட்டும் இன்னும் நிறுத்த முடியவில்லை” என்றார். 

குவிக்கப்பட்டுள்ள மணல்

காஞ்சிபுரம் கலெக்டராக சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பா.பொன்னையா ஐ.ஏ.எஸிடம் பேசினோம், “பாலாற்றில் இப்போது மணல் அள்ளுகிறார்களா?” என்றவர் நம்மிடம் கேட்டு இடத்தை குறித்துக் கொண்டு, “உடனே நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார். 

பாலாறு என்பது வட தமிழகத்தின் இயற்கை வளங்களைக் குவித்து வைத்திருக்கும் பேருயிர். பாலாறு மட்டுமல்ல ஒவ்வொரு ஆறும் பேருயிர்தான். 


டிரெண்டிங் @ விகடன்