வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (22/09/2017)

கடைசி தொடர்பு:13:35 (22/09/2017)

‘நண்பா... என் முகம் இங்கே இருக்கிறது!’ பெண் மனம் கேட்கலாமா?

பெண்

ஒவ்வொரு முறை கண்ணாடி எதிரில் நிற்கும்போதும் பார்க்கிறேன்... நெற்றியில் விழும் முடிகற்றை, வட்ட முகம், கண்களில் சிரிப்பு. ஒரு நிறைவான புன்னகையுடன் கண்ணாடியைவிட்டு அகல்கிறேன். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி என் கழுத்துக்குக் கீழே மையம்கொண்டு அங்கேயே அகலாமல் நிலைகொள்ளும் விழிகளைத்தான் என்னால் இன்று வரை புரிந்துகொள்ள முடியவில்லை. 

வயதுக்கு வரும் ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகங்களைத் தடவிப் பார்க்கும்போது எழும் முதல் உணர்வு, ‘இங்கு என் குழந்தை வாய்வைத்துப் பால் அருந்தும் அல்லவா’ என்ற சிலிர்ப்புதான். தன் அன்புக்குரியவர்களை, அன்புக்குரியவற்றைத் தன் நெஞ்சுக்கூட்டில் அணைத்துக்கொள்ளவே ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள். அவளுக்கு மார்பு என்பது அத்தனை நெருக்கம். அதனால்தான், மற்ற உறுப்புகளில் விழும் வக்கிரமான பார்வைகளும், அத்துமீறும் கைகளும் ஏற்படுத்தும் வலியைவிட மார்பில் விழுபவை கடும் வலியை ஏற்படுத்துகின்றன. இங்கே ஒரு பெண் பருவம் அடைந்ததிலிருந்து இந்தச் சமூகம் அவளுக்குக் கற்றுக்கொடுக்கும் முக்கியமான பாடம், 'உன் மார்பகங்களை எப்படிச் சரியாக மறைக்க வேண்டும்' என்பதுதான். இப்படிப்பட்ட ஒரு பாடத்துடன்தான் பெண்கள் வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

என் பதின்பருவத்தில் என் மார்பகம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கிய நாளில், முதன்முதலில் அந்த வலியை உணர்ந்தேன். என் உறவினர் ஒருவர் என்னருகில் நெருங்கி அமர்ந்து, விரலால் அவ்வப்போது என் மார்பைத் தடவிப் பார்ப்பார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகல்வதைத் தவிர அந்த வயதில் எனக்கு எதுவும் தோன்றவில்லை. நெஞ்சு முட்டும் கோபம்தான், அவரை நோக்கி கத்த நினைப்பேன். ஆனாலும், வாயைத் திறந்து சொல்ல ஏதோ ஒன்று தடுத்தது. பல நாள்கள் கழித்து, என் அம்மாவிடமும் தயங்கித் தயங்கி சொன்னேன். அப்போதும்கூட, ‘என் மார்பைத் தொட்டான்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘இங்கே தொட்டான்’ என்று கை விரலால் சுட்டிக்காட்டவே முடிந்தது.

பெண்

வளர வளர, என் மார்பகங்களின் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கத் தொடங்கின. பள்ளி ஆசிரியரில் ஆரம்பித்து பணியிடத்தில் உயரதிகாரிகள் வரை என் மார்பில் கண் பதித்துப் பேசும் எவரையும் நான் தட்டிக் கேட்க முடிந்ததில்லை. 'அங்கே பார்க்காதே' என்று கத்த நினைத்தாலும் அது முடிந்ததில்லை. என் மார்புகள் குறித்து அவ்வளவு எளிதில் என்னால் வாய் திறந்து பேச இயலவில்லை. இதுபோன்ற வக்கிரமான பார்வைகளைக் கடந்து பழகிய எனக்கு, கூட்டத்தைப் பயன்படுத்தி மார்பைக் கிள்ளிய அந்த கை மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இது குறித்து பேசத் தடையாக இருந்த கொஞ்சநஞ்ச தயக்கத்தையும் உடைத்தது. 

அன்று அதுவரை அடக்கிவைத்திருந்த கோபத்தை எல்லாம் அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்த முயன்றேன். ஆனால், அந்த முகம் அறியா யாரோவை எப்படிக் கண்டிக்க முடியும்? அந்த இடத்தைவிட்டு நகர்ந்த பின்பு மனம் கசந்து அழுதேன். அன்றுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது, அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அழுவது இந்தச் சமூகம் தன் உடலில் புதைத்த மானத்தை இழந்துவிட்டோம் என்பதற்காகவோ, ‘தட்டிக் கேட்க முடியாது’ என்று கற்பிக்கப்பட்ட இயலாமையினாலோ அல்ல. தன்னுடன் வாழும் ஓர் சக உயிர் தன் தாய்மையை, பெண்மையை அவமதித்துக் கொடுக்கும் வலியின் வேதனை அது. ‘என் குழந்தை வாய்வைக்க வேண்டிய முலையை ஒருவன் பிடித்துக் கிள்ளிவிட்டானே’ என்ற எண்ணம்தான் எனக்குத் தாங்கவியலா வலியைத் தந்தது. 

இங்கே பெண்ணுடலைக் குறித்துப் பொதுவெளியில் பேசுவதே தவறு என்ற நிலை நிலவுகிறது. பெண்ணின் மார்பகங்களைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் குறித்துச் சொல்லவே வேண்டாம். தன் உடலைக் குறித்து தானே பேசத் தயங்கும் அவலம் இன்றுவரை தொடர்கிறது. காரணமே இல்லாமல் இங்கு எழுப்பப்பட்டிருக்கும் தடைகள், பல நேரங்களில் வேதனைச் சிரிப்பையே வரவழைக்கின்றன. காலம் காலமாக மறைக்கப்பட்ட ஒரு விஷயத்தில் இயல்பாகவே கவர்ச்சியின் நிழல் படிந்துவிடும்தான். என்ன செய்ய? அது பாலூட்டும் ஓர் உறுப்பில் அதன் உச்சத்தை எட்டிவிட்டது கொடுமைதான். 

இதுபோன்ற அத்துமீறல்கள் ஒரு பெண்ணை மனரீதியாக முற்றிலும் குலைத்துப் போடுகின்றன. அது தரும் வலியிலிருந்து அவள் மீண்டுவருவது மிகவும் சவாலானதாக, சிக்கலானதாக இருக்கிறது. என்றுமே முதல் அடி சற்று கடினமாகவே இருக்கும். பல நூறு ஆண்டுகளாக நீடிக்கும் மறைப்பு, கவர்ச்சி, அத்துமீறல் சில வருடங்களில் காணாமல் போகாதுதான். அது தரும் வலியில் துவண்டுப்போகாமல் முதல் அடியைத் தொடர்வதுதான் இன்று முக்கியம். நம் மகள்களுக்கு இந்த வலி வேண்டாம். ஏனெனில், இந்த வலி கொடுமையாக இருக்கிறது. உயிரை அறுக்கிறது. எங்களுக்கு வலிக்கிறது நண்பர்களே, மிகவும் வலிக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்