வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/09/2017)

கடைசி தொடர்பு:16:51 (23/07/2018)

செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டின் பின்னணி!

கரூரில் உள்ள செந்தில்பாலாஜி உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், தொழிற்சாலைகள், மில்கள் என்று 13 இடங்களில் இதுவரை ரெய்டு நடந்து வருகிறது.


 

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, கர்நாடகாவின் குடகு ரிசார்ட்ஸில் தங்கியிருக்கிறார். அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகச் சொல்லி ஆறு கோடி வரை பணம் வசூலித்ததாக அவர்மீது புகார் படிக்கப்பட்டது. அந்தப் புகார் இப்போது விஸ்வரூபம் எடுக்க குடகு ரிஸார்ட்ஸில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். அதுவும் குண்டாஸில் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு பரபரக்கிறது. இந்நிலையில்தான், கரூரில் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு நடக்க, பரபரப்பு தொற்றி இருக்கிறது.

இன்று மதியம் கோயம்புத்தூரில் இருந்து வந்த ஐம்பது இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் கரூர் வந்தனர். எட்டுக் குழுக்களாகப் பிரிந்த அவர்கள் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான கொங்கு மெஸ் சுப்ரமணியன்,ஒப்பந்தக்காரர்கள் வங்கர் மற்றும் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்கள், செந்தில்பாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைக் கொண்டு வர நினைத்த வாங்கலில் மருத்துவக்கல்லூரியை அமைக்க ஏதுவாக சணப்பிரட்டியில் மருத்துவக்கல்லூரியை அமைக்க முயற்சி செய்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கிய தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் வீடுகள், அலுவலகங்கள், சாயப்பட்டறைகள், மில்கள் என்று 13 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை போட்டிருக்கிறார்கள். கையோடு கத்தை கத்தையாக ஆவணங்களை அள்ளி காரில் போட்டுக்கொண்டு அடுத்த ஸ்பாட்டுக்கு பறக்கிறார்கள். 

"டி.டி.வி.தினகரன் அணியில் ஆக்டிவாக செயல்படும் செந்தில்பாலாஜியைத் தங்கள் பக்கம் இழுக்க, இப்படி ஒரு ரெய்டை முதல்வர் அரங்கேற்றியிருக்கிறார். பா.ஜ.கவின் யோசனையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் மேற்பார்வையில் இந்த ரெய்டு காரியம் தொடங்கியிருக்கிறது. அடுத்து, மற்ற டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பிலும் இந்த ரெய்டு மேளா தொடரும்" என்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்த சிலர்.