வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (22/09/2017)

கடைசி தொடர்பு:09:01 (22/09/2017)

“வேறு சாதியினர் பூஜை நடத்தினால் தேவி உக்கிரமாகி விடுவாள்!” - அர்ச்சகர் படும் பாடு

கேரளா பல விஷயங்களில் முற்போக்கான பூமி. ஆனால் சாதிக்கொடுமைகளில் பல நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறது. சாதியத்துக்கு எதிரான பல போராட்டங்கள் கேரளாவில் நடைபெற்றிருக்கின்றன என்றாலும் சாதியக்கொடுமைகள் முற்றாக ஒழிந்துவிடவில்லை.

செட்டிக்குளக்காரா தேவி கோயில்

தமிழகத்தில் தந்தை பெரியார் சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக போராடிய காலகட்டத்தில் கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் ஸ்ரீநாராயணகுரு. ஈழவ வகுப்பைச் சேர்ந்த மக்கள், பந்தளம், பணிக்கர், ஆசான் என்ற பல பெயர்களில் கேரளத்தில் பரவலாக வாழ்கின்றனர். ஆனால் ஆதிக்கச்சாதி மக்களுக்கு அடங்கிவாழ வேண்டிய நிலை பல்லாண்டுகாலம் நீடித்தது. பெரியாருக்கும் ஸ்ரீநாராயணகுருவுக்கும் சாதி எதிர்ப்புதான் முக்கியக் கொள்கை. போராடிய விதம் மட்டுமே வேறு!

வைக்கம் போராட்டம் தமிழகத்திலும் பிரபலம். வைக்கத்தில் உள்ள  சோமநாதர் கோயில் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து செல்லத் தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து ஸ்ரீநாராயணகுருவின் சீடரும் காங்கிரஸ் கட்சியைச் சேந்தவருமான டி.கே. மாதவன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு ஆதரவு தெரிவித்துத்தான் பெரியார், வைக்கம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். பெரியார் வைக்கம் சென்றதும் கேரளாவையே அதிர வைத்தது. வைக்கம் போராட்டமும் வெற்றிபெற்றது. ஆனால் சாதி ஒழியவேண்டும், தீண்டாமை ஒழியவேண்டும் என்பதற்காக ஸ்ரீநாராயணகுருவும் பெரியாரும் போராடினார்களே, அந்த நோக்கம் கேரளத்தில் இன்னும் முழுமையாக  நிறைவேறவில்லை.

கடந்த 1936-ம் ஆண்டு, கேரளத்தில் தலித் சமூகத்தினர் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகி விட்ட பின்னரும் தலித் ஒருவர் கூட கேரளக் கோயில்களில் அர்ச்சகராகி விட முடியாது. அவர்கள் மட்டுமல்ல பிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தப்பித் தவறி அர்ச்சகரானாலும் கூட நிம்மதியாகப் பணியில் ஈடுபட முடியாது. 

ஆலப்புழை மாவட்டம்  காயங்குளத்தில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயிலில், சுதிர் குமார் என்பவர் கீழ்சந்திதியாகப் பணி புரிந்தார். இவர் ஈழுவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். கீழ்சந்நிதியாக (துணை அர்ச்சகர்) 13 வருடங்கள் அனுபவம் கொண்டவர். பணியில் நேர்த்தியும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட சுதிர் குமாரை மேல் சந்நிதியாக ( தலைமை அர்ச்சகர்) பதவி உயர்வு அளித்து செட்டிக்குளக்காரா தேவி கோவிலுக்குப் பணிமாற்றம் செய்ததது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

செட்டிகுளக்கார தேவி கோயில், அம்மன் கோயில்களில் விசேஷமானது. பழம் பெருமை வாய்ந்த கோயிலாக இதை அறிவிக்க 'யுனெஸ்கோ' ஆய்வு செய்து வருகிறது.  இந்தக் கோயிலுக்குத்தான் சுதிர்குமார் மேல் சந்நிதியாகப் பணியமர்த்தப்பட்டார். சுதிர்குமாரைத் அர்ச்சகராக ஏற்றுக்கொள்ள,  செட்டிக்குளக்காரா கோயிலில் பணிபுரியும் உயர் சமூக அர்ச்சகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, சர்ச்சை வெடித்தது. ஜூன் 19ம் தேதி, செட்டிக்குளக்காரா கோயிலுக்கு சுதிர் குமார் மாற்றம் செய்யப்பட்டார். எதிர்ப்பு காரணமாக அவரால் பணியில் சேர முடியவில்லை.

ஈழுவ வகுப்பு அர்ச்சகர் சுதிர் குமார்

செட்டிக்குளக்காரா கோயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “இங்கு பத்ரகாளியம்மன்தான் முக்கியத் தெய்வம். தேவியின் உக்கிரத்தை குளிர்விக்க 'சந்தோஷ சமஸ்கார' என்கிற வழிபாடு நடத்தப்படுகிறது, மலையாள பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தகைய வழிபாடு  நடத்துவதில் தேர்ந்தவர்கள். இல்லையென்றால் தேவி உக்கிரமடைந்து விடுவாள். காலம் காலமாக இந்தக் கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை இதுதான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, சுதிர் குமாரின் நியமனத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது கோயில் நிர்வாகம். விசாரணை நடத்திய நீதிமன்றம், முடிவெடுக்கும் உரிமையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் பி.சி. ராமராஜா பிரேமாவிடம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10ம் தேதி சுதிர் குமாரின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது. 

தனக்கு வழங்கப்பட்ட  பணி உயர்வு நியாயமானது... எந்தக் கோயிலிலும் பணிபுரிய தனக்கு உரிமை உள்ளதாகக் கூறும் சுதிர்குமார், “சாதி அடிப்படையில் அர்ச்சகர்கள் தேர்வு இருக்கக் கூடாது. பணி செய்யும் முறை, அறிவுத்திறனை கணக்கில்கொண்டே அர்ச்சகர்கள் தேர்வு அமைய வேண்டும்” என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக் காட்டுகிறார்.

இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.  தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்த சுதிர் குமார்,  செட்டிக்குளக்காரா கோயிலில் பணி புரியவே விரும்புவதாக கடிதம் அளித்தார்.  சுதிர் குமாருக்கு ஆதரவு தெரிவித்து, கேரள காமராஜ் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்