வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (21/09/2017)

கடைசி தொடர்பு:10:33 (22/09/2017)

கமல்... அரவிந்த் கெஜ்ரிவால்... ஒரு ஒப்பீடு! 

தன் ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசிவிடவில்லை; தேவை ஏற்படும் போது அரசியலுக்கு வருவேன் என அவர் எந்த உறுதியும் தெரிவித்திருக்கவில்லை; இப்போது... அப்போது... என காலக்கெடுவையும் கொடுத்திருக்கவில்லை. ஆனால் அரசியல் நோக்கிய பயணத்தை சற்று வேகமாகவே துவங்கியிருக்கிறார் கமலஹாசன்.

'செயலில் இறங்காமல் எங்கும் சென்றடைய முடியாது' என்ற மகாத்மா காந்தியடிகளின் வார்த்தையை ஆழமாக நேசிப்பவர் தனது அரசியல் பயணத்தை உறுதி செய்திருக்கிறார். கமலஹாசன் புதுக்கட்சி துவங்க கூடும் என்ற சந்தேகம் இருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தியிருக்கிறது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமலஹாசன் சந்திப்பு.

கேரளா முதல்வர் பினராயி விஜயனை  கடந்த இருவாரம் முன்பு கமலஹாசன் சந்தித்திருக்கிறார். அதற்கு முன்னர் பல அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறார். அதற்கெல்லாம் இல்லாத முக்கியத்துவம், கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு மட்டும் எதற்கு என நீங்கள் கேட்கக்கூடும். ஏனென்றால் கமலஹாசனுக்கும், கெஜ்ரிவாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. 

அரசு ஊழியரான கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து, ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற மக்கள் இயக்கத்தை நடத்தியவர். இதன் நீட்சியாகவே ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டது. மாற்று அரசியலை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். கட்சி துவங்கி ஒரே ஆண்டுக்குள் தேர்தல்; ஊழலை ஒழிப்போம் என்ற கொள்கை தான் மையம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்தியாவில் கட்சி துவங்கி அதிரடியாய் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் இருவர். ஒருவர் எம்.ஜி.ஆர். மற்றொருவர் என்.டி.ஆர்.  இருவருமே நடிகர்கள். அப்போது இருந்த ஒரே மக்கள் தொடர்பு சாதனமான திரையரங்குகள் மூலம் மக்களிடம் அறிமுகமாகியிருந்தனர் இவர்கள் இருவரும். அதையே வெற்றியாகவும் அறுவடை செய்தனர். ஆனால் வேலையை உதறிய ஒரு அரசு ஊழியரான கெஜ்ரிவால், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். செய்ததை செய்துக்காட்டினார். அதாவது கட்சி துவங்கிய வேகத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற மிகப்பெரிய மக்கள் இயக்கத்தின் பின்னால் உருவான கட்சியின் வெற்றி தான், கெஜ்ரிவாலின் வெற்றி. கமலஹாசன் எதிர்பார்ப்பதும் அப்படியான வெற்றி தான். இது கமலஹாசன் - கெஜ்ரிவால் சந்திப்பு முக்கியத்துவம் பெற முக்கிய காரணம். மற்றொரு காரணமும் உண்டு. அது ஊழல் ஒழிப்பு கோரிக்கை.


இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்துறை பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்து, டெல்லி வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றியவர் கெஜ்ரிவால். பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொள்ளத்துவங்கினார். அரசு பணியில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிரான பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது. அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால் அரசு பணியில் இருந்து விலகி போராட்டத்தை தீவிரப்படுத்தியவர்.

அரசு பணியில் இருந்த போதும் சரி... ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் தற்போதும் சரி... மிஸ்டர் க்ளீன் எனும் இமேஜை தக்க வைத்துக்கொள்பவர் கெஜ்ரிவால். கமலஹாசனும் அப்படியானவராகவே தெரிகிறார். திரைத்துறையில் மிஸ்டர் க்ளீனாகவே வலம் வருகிறார். கறுப்பு பணம் அதிகளவில் விளையாடும் தான் சார்ந்த துறையில், அதன் பாதிப்பு துளியும் என்னிடம் இல்லை என பகிரங்கமாக அறிவிக்கிறார். ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியான முழக்கங்களை முன்வைத்து வருகிறார். இப்படி கெஜ்ரிவாலுடன் ஏறத்தாழ பொருந்தியே போகிறார் கமலஹாசன்.

முதல் தேர்தலில் கட்சி நிதி பெறும் போது பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது, கட்சி இணைய தளத்தில் அதன் விவரங்களை வெளியிடுவது என்பது கெஜ்ரிவாலின் எடுத்த முடிவுகளில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. அனுபவம் இல்லாத வேட்பாளர்கள்; பண பலம் இல்லை; தேர்தல் வேலை பார்க்க தன்னார்வ தொண்டர்களே இருந்தனர் என அரவிந்த் கெஜ்ரிவால் முதல் தேர்தலில் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். ஒருவேளை கட்சி துவங்கினால் கமலஹாசன் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

"நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டது என்னவென உங்களால் யூகிக்க முடியும். ஊழலுக்கு எதிரான யாரும் எனக்கு உறவினர்களாகி விடுகிறார்கள் என்பது தான் உண்மை. அந்த உறவு தான் இங்கு தொடர்கிறது. மதவாதம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஒன்றிணைவதில் ஆச்சரியமில்லை." என கமலஹாசன் சொன்னதும், அதை அரவிந்த் கெஜ்ரிவால் வழிமொழிந்ததும் இதைத்தான் உணர்த்துகிறது. 

தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தவறிப்போன இரு கட்சிகள் உண்டு. ஒன்று ம.தி.மு.க. மற்றொன்று தே.மு.தி.க. இரு கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்போடு உருவானபோதும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது கைகூடாமலே போனது. இவ்விரு கட்சிகளும் வளராததற்கு காரணம். இவை இரண்டும் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த கட்சிகள் போலவே இருந்தன. ஆனால் கெஜ்ரிவால் தன் கட்சியை அப்படி கட்டமைக்கவில்லை.

கெஜ்ரிவால் வென்று ஆட்சியை கைப்பற்றிய போது, தமிழகத்தில் ஒரு கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டது. அது கெஜ்ரிவால் செய்ததில் எதை இவர்கள் செய்யவில்லை என்பதே அது. கமலஹாசனின் இந்த சந்திப்பை இந்த கேள்வியோடு ஒப்பிட்டே நாம் பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல கமலஹாசன் திரைத்துறை மூலம் மக்களுக்கு அறிமுகமானவராக இருக்கிறார். அது மட்டும் போதாது, பெரும் மக்கள் இயக்கத்தின் பின்னால் உருவாகும் கட்சியாக தனது இருக்க வேண்டும் என கமலஹாசன் எண்ணக்கூடும். அதற்கான சந்திப்பாகவும் இது இருக்கக் கூடும்.  இப்போதைய சூழலில் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அரசியலில் கால்பதிக்க தயாராகி விட்டார் கமலஹாசன் என்பது தான் அது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்