தூத்துக்குடியில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியாக மலேசியாவிற்கு கண்டெய்னர் லாரியில் தடை செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மதுரை பைபாஸ் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு லாரியைச்  சோதனையிட்டதில் ஒரு கண்டெய்னரில் மின் மோட்டார்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.  ஆனால், லாரியின் உள்ளே  சோதனையிட்டதில் மின் மோட்டார்களுக்கு நடுவே 9.5 டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செம்மரக்கட்டைகள் மற்றும் லாரியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தூத்துக்குடியிலுள்ள தனியார் சரக்கு பெட்டகம் கையாளும் தளத்திற்குக் கொண்டு வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் 79 மின்மோட்டார்களும், ரூ. 3. கோடி மதிப்பிலான 9.5 டன் செம்மரக்கட்டைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரியில் இருந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலிருந்து செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் பணத்திற்காக இவற்றை கண்டெய்னர்களில் பதுக்கி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.     

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!