வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (21/09/2017)

கடைசி தொடர்பு:22:50 (21/09/2017)

தினகரன் அணியில் அடுத்த விக்கெட்!

தினகரன் அணியிலிருந்த வசந்தி முருகேசன் எம்.பி, விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வசந்தி முருகேசன்


தினகரன் அணியில் 7 எம்.பி-க்கள், 3 எம்.எல்.ஏ-க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ -க்கள் உள்ளனர். இதில் நெல்லை மாவட்டம், தென்காசி தொகுதி (தனி) எம்.பி- யான வசந்தி முருகேசன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து வசந்தி முருகேசனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், " 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தினகரன் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளில் உள்ள சிலர், மதில் மேல் பூனை போன்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியை தினகரன் கவிழ்க்க திட்டமிட்டதை சிலர் விரும்பவில்லை. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதாரவளிக்க வசந்தி முடிவெடுத்துள்ளார்" என்றனர்.

சென்னையில் நடந்த வசந்தி முருகேசன் இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஜக்கையன் எம்.எல்.ஏ-வைத் தொடர்ந்து வசந்தி முருகேசன் எம்.பியும் அணி மாற உள்ளதால் தினகரன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.