குடிபோதையில் கார் ஓட்டி விபத்து; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்யப் பரிந்துரை | Actor jai drunken drive accident near adyar bridge

வெளியிடப்பட்ட நேரம்: 00:10 (22/09/2017)

கடைசி தொடர்பு:10:58 (22/09/2017)

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்யப் பரிந்துரை

நடிகர் ஜெய் ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றதாக, நடிகர் ஜெய் மீது போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

'சென்னை 28', 'சுப்பிரமணியபுரம்', 'ராஜாராணி' உட்பட பல்வேறு தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர், நடிகர் ஜெய். நேற்று அதிகாலை 2.30 மணியளவில், ஒரு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு, ஜெய் தனது ஆடி சொகுசு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அடையாறு மேம்பாலத்தில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார், திருவான்மியூர் சிக்னல் அருகில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி ஓடி, அங்கிருந்த சாலைத் தடுப்புச்சுவரில் மோதி கார் நின்றது. கார் மோதியதில், தடுப்புச்சுவர் முற்றிலும் சேதமடைந்தது. ஜெய்யின் கார் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஆனால் அவருக்கோ, ரோட்டில் நடந்துசென்றவர்களுக்கோ எந்த வித காயமும் இல்லை. நள்ளிரவில் திருவான்மியூரில் நடந்த இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கார் மோதியதைக் கண்டதும் அங்கு நடந்து சென்றவர்கள் ஓடிவந்தனர். போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாஸ்திரி நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். காருக்குள் அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது அவர், உச்சகட்ட குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. விபத்தின்போது ஜெய்யுடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். காரைப் பறிமுதல்செய்த போலீஸார், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சோதனைக்காக காரை அனுப்பிவைத்தனர். ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இதையடுத்து, ஜெய்யை கைதுசெய்த போலீஸார், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய போக்குவரத்துப் போலீஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரைசெய்துள்ளது.