புரட்டாசி சனிக்கிழமை: நவதிருப்பதிக்குச் சிறப்புப் பேருந்து ஏற்பாடு

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதிகளுக்குச் செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தூத்துக்குடி கிளை சார்பில் பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடியிலிருந்து சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

nava thiruppathi perumal

புரட்டாசி மாதம் முழுவதுமே பல விரதங்கள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த மாதத்தைப் ’பெருமாள் மாதம்’ என்றே அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உட்பட எல்லாப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், கருடசேவை ஆகியவை நடப்பது வழக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில்  நவதிருப்பதிகள் எனப்படும் 9 பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த 9 கோயில்களுமே 9 கிரகங்களுக்கான பரிகார ஸ்தலங்கள் என்பதால் சாதாரண சனிக்கிழமைகளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த 9 கோயில்களையும் ஒரே நாளில் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷின் உத்தரவுப்படி அரசு போக்குவரத்துக் கழகத்தின் தூத்துக்குடி கிளை சார்பில் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ’’நாளை (23ம் தேதி) புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தொடங்குகிறது. நாளை 23ம் தேதி, இரண்டாவது சனிக்கிழமையான 3ம் தேதி, மூன்றாவது சனிக்கிழமையான அக்டோபர் 7ம் தேதி மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 14ம் தேதி ஆகிய நான்கு சனிக்கிழமைகளும் காலை 7 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் நவதிருப்பதிகளுக்குப் புறப்படுகிறது. 9 பெருமாள் கோயில்களுக்கும் சென்று விட்டு மீண்டும் இரவு 7 மணிக்குப் பழைய பேருந்து நிலையம் வந்து சேரும். இதில் பெரியவர்களுக்கு ரூ.325-ம் சிறியவர்களுக்கு அதில் பாதி கட்டணமும் வசூலிக்கப்படும். பக்தர்கள் தனித்தனி பேருந்துகளில் 9 திருப்பதிகளுக்கும் மாறி மாறிப் பயணம் செய்வதைத் தவிர்க்க, ஒரே பேருந்தில் பயணித்து 9 திருப்பதிகளையும் தரிசனம் செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன’’ எனத் தெரிவித்துள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!