வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (22/09/2017)

கடைசி தொடர்பு:14:41 (22/09/2017)

“தினகரன் அணியில் முதல்வரின் ஸ்லீப்பர் செல்ஸ்!” - பரபர பின்னணி #VikatanExclusive

  முதல்வரைச் சந்தித்த வசந்திமுருகேசன் எம்.பி.

தினகரன் அணியிலிருக்கும் பெரும்பாலான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், முதல்வரின் 'ஸ்லீப்பர் செல்ஸ்' எனத் தெரியவந்துள்ளதால், தினகரன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைய 30 நாள்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தார் தினகரன். 'ஆகஸ்ட் புரட்சி' என்று காத்திருந்த தினகரனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தினகரனுக்கு ஆதரவாக 37 எம்.எல்.ஏ-க்களும் 10 எம்.பி-க்களும் குரல் கொடுத்தனர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் காட்டலாம் என்று முடிவுசெய்த தினகரன் தரப்பு, கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வதுக்கு வழங்கப்பட்ட துணை முதல்வர் பதவியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதையும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், கடந்த ஆகஸ்ட் 22ல் ஆளுநரைச் சந்தித்தனர். இதற்கு பதிலடியாக, தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு ,  சட்டரீதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடிகொடுக்க முடிவுசெய்து, நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும், திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் மாஸ் காட்டியுள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். உளவுத்துறைமூலம் தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அடுத்தடுத்து அவரது நடவடிக்கைகளுக்கு செக் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரன்

தினகரன் எடுக்கும் ரகசிய முடிவுகள்கூட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குச் சென்றுவிடுகிறது. இதனால், தினகரன் தன்னுடைய விசுவாசமுள்ள ஆதரவாளர்களைத் தவிர வேறுயாரிடமும் எந்தத் தகவலையும் சொல்வதில்லையாம். சமீபகாலமாக தினகரனின் தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிவதில்லை. இதனால், தினகரன் அணியிலிருப்பவர்களைத் தங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக மாற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவுசெய்தனர். தினகரனிடம் விசுவாசமாக இருந்த டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.  தளவாய்சுந்தரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் ஸ்லீப்பர் செல் என்று கருதிய தினகரன், உடனடியாகத் தளவாய் சுந்தரத்தை டெல்லி பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்யும்படிக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், தினகரன் அணியிலிருந்த தளவாய் சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். கடந்த செப்டம்பர் 12ல் நடந்த பொதுக்குழுவில் பங்கேற்று, தினகரனுக்கும் சசிகலாவுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்குக்கூட தளவாய்சுந்தரம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

 தினகரன், மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரைச் சந்திக்கும் தகவல், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு முன்கூட்டியே தெரியவந்தது. இதனால், தினகரன் ஆளுநரைச் சந்திக்கும் நேரத்தில், அவரது அணியிலிருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ மூலமே தினகரனுக்கு பதிலடிகொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவுசெய்தனர். இதனால், ஜக்கையனிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், தினகரன் ஆளுநரைச் சந்தித்த நேரத்தில் ஜக்கையன், சபாநாயகரையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார். அவர்தான், முதல்வரின் இரண்டாவது ஸ்லீப்பர் செல் என்று தினகரனுக்குத் தெரியவந்தது. இதன்பிறகு தினகரன், ரகசியம் காக்கத் தொடங்கினார். அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள்கூட அவருடன் இருக்கும் நால்வரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.

 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த வசந்திமுருகேசன் எம்.பி

சசிகலாவுக்கு எதிராக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், விஜிலா, வசந்தி உள்ளிட்ட எம்.பி-க்கள் டெல்லிக்குச் சென்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர். அதில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று குறிப்பிட்டனர். மேலும், நாங்கள்தான் அ.தி.மு.க அம்மா அணி என்று கூறியதோடு, எங்களின் கருத்தைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். இதனால், சசிகலாவின் கட்சிப் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்தவித முடிவையும் தெரிவிக்கவில்லை. தினகரன் டெல்லிக்குச் செல்லும் தகவல், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குத் தெரிந்துள்ளது. அன்றைய தினத்தில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தினகரன், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்ததால், அவர்கள் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், வசந்தி முருகேசன் எம்.பி-யின் இல்லத் திருமண விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் அமைச்சர்கள் மூன்று பேர் பங்கேற்றனர். இது, தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, வசந்தி முருகேசனும் முதல்வரின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்ற சந்தேகம் தினகரன் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டது. இதனால், தினகரன் அணியிலிருந்த வசந்திமுருகேசன் எம்.பி., முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்தார். வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால். தினகரன் அணி பலவீனமடைந்துள்ளது. தினகரன் அணியிலிருக்கும் இன்னும் சிலர், முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்களில் சிலர், அணி மாறும் மனநிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைச் சமரசப்படுத்தும் முயற்சியில் தினகரன் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினரகனுக்கும் நடந்துவரும் மோதல், இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுத்துவிட்டால் கட்சி, ஆட்சி தங்கள் கைக்கு முழுமையாக வந்துவிடும் என்று கணக்குப் போட்டு காயை நகர்த்திவருகின்றனர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இதற்காக, அந்த அணியைச் சேர்ந்த எம்.பி-க்கள், அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், "தினகரனை நம்பி எம்.எல்.ஏ-க்கள் பதவியை இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்திக்க அனுமதி கேட்டு தூது அனுப்பியுள்ளனர். அதுதொடர்பாக  ஆலோசனை நடந்துவருகிறது. தகுதி நீக்க உத்தரவை சபாநாயகருக்குத் திரும்பப் பெறும் அதிகாரம் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு ஒருவாய்ப்பு உள்ளது. அதாவது, நீதிமன்றத்தில் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அரசு மேல்முறையிடாது என்ற உத்தரவாதத்தைக் கொடுக்க முடியும். மேல்முறையீடு செய்யவில்லை என்றால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கும். அந்த உத்தரவாதத்தைப் பெற தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்மூலம் பேசிவருகின்றனர். தினகரன் கூறியதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் அவரது ஸ்லீப்பர் செல்ஸ் இல்லை. நாங்கள்தான் அவரது அணியில் எங்களின் ஸ்லீப்பர் செல்ஸை வைத்திருக்கிறோம்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்