Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“பயந்தாங்கொள்ளியான நான், பலரின் பயத்தைப் போக்கியிருக்கேன்” - கராத்தே டீச்சரின் கதை

கராத்தே டீச்சர் நாகக்கன்னி

''ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முனைப்புடனும் இருந்தால் மட்டுமே பிரச்னையிலிருந்து காப்பாத்திக்க முடியும். அடுத்தவங்க உதவியை எப்பவும் எதிர்பார்த்துட்டிருக்க முடியாது. அதனால், ஒவ்வொரு பெண்ணும் கராத்தே போன்ற தற்காப்புக் கலையை கத்துவெச்சிருக்கிறது அவசியம்'' என்கிறார் சென்னை, போரூரைச் சேர்ந்த கராத்தே ஆசிரியை நாகக்கன்னி. 

''படிக்கிறதை விட்டுட்டு என்ன படம் வேண்டியிருக்கு என திட்டுவதுதான் பெரும்பாலும் வீடுகளில் நடக்கும். ஆனால், 'நீ வீட்டிலேயே இருந்து படம் பார்த்தாலும் பரவாயில்லை. படிக்கவெல்லாம் வேணாம்'னு தனக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளையும் கட்டுப்படுத்தி வளர்த்தவர் என் அப்பா. நான் சொல்றது ஏதோ 1950 காலத்தில் கிடையாது. 1990-ம் ஆண்டில்தான் இந்தக் கட்டுப்பாடுகள். எங்க சுற்றுவட்டாரத்தில் பிள்ளைகளை வெளியில் அனுப்பி படிக்கவைக்க முடியாத அளவுக்கு வறுமையின் பிடியில் இருந்தோம். என்னோடு பிறந்த ஐந்து அண்ணன்களுமே நான்காம் வகுப்போடு நின்னுட்டாங்க. அக்காவுக்கு 14 வயசிலேயே கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. 'பிள்ளையை வீட்லயே வெச்சுட்டு என்ன பண்ணப்போறே?'னு அக்கம்பக்கத்தில் கேட்டுட்டே இருப்பாங்க.

எனக்கும் அக்கா மாதிரியே சீக்கிரமே கல்யாணம் பண்ணிவெச்சுடுவாங்களோனு பயம். நான் கண்ட கற்பனைக் கனவு கலைஞ்சுடுமோனு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் 'திக் திக்'னு அடிச்சுக்கும். என் அப்பா இறந்துவிட, இனி என் படிப்பு அவ்வளவுதான்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் அப்பாவாக, அம்மாவாக, ஆசானாக என் அண்ணன்களில் ஒருவரான முருகன் என்னைத் தொடர்ந்து படிக்கவைக்க ஆரம்பிச்சார். 'எங்க யாருக்கும் படிக்க கொடுத்துவைக்கலை. நீயாவது படிச்சுப் பெரிய ஆளா வரணும். உனக்குத் தேவையானதை நான் பண்ணித்தரேன்'னு சொன்னார். பள்ளியில் கொண்டுபோய் விடறதும், கூட்டிட்டு வர்றதுமா இருந்தார் அந்தத் தெய்வமகன். என் கற்பனை துளிர்விட ஆரம்பித்தது'' என்று நாகக்கன்னி சொல்லும்போதே முகத்தில் அவ்வளவு பூரிப்பு. 

“சப் இன்ஸ்பெக்டர் ஆவதுதான் என் கனவு. சின்ன வயசிலிருந்தே நடிகை விஜயசாந்தி படம்னா ரொம்ப இஷ்டம். எவ்வளவு தைரியமானப் பொண்ணா இருக்காங்க. எதிரிகளை எப்படியெல்லாம் பந்தாடுறாங்க. பஸ்ஸில் போகிறப்ப அசிங்கமா இடிக்கிற பயலுகளை தட்டிக் கேட்கவே நம்மால் முடியலையே'னு நினைச்சு மருகுவேன். வீட்டில் இருக்கும்போது கைகால்களை தூக்கி, ஜாக்கிசான் மாதிரி 'ஹா... ஹூ'னு சத்தம் போடுவேன். 'பொம்பள புள்ள கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா நடந்துக்குதா பாரு'னு என் அம்மா திட்டிட்டே இருப்பாங்க. என் அண்ணன்களோ, 'சூப்பர்டா'னு பாராட்டுவாங்க. இது என்னை ஊக்கப்படுத்திச்சு. சப் இன்ஸ்பெக்டரா ஆகணும்ங்கற கனவை நிஜமாக்க, படிப்பையும் அந்த வழியிலேயே தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சேன். பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சியில் சேர்ந்தேன். பிராக்டீஸ் மற்றும் சுதந்திர, குடியரசு தின விழாக்களில் காக்கி யூனிஃபார்ம் போட்டதுமே நெஞ்சை நிமிர்த்தி தெருவில் நடந்துபோவேன். 'ஏ... ரத்தினம்மா! உம் புள்ள பேன்ட் சட்டையைப் போட்டு நடந்துப்போகுது? என்ன போலீஸாகிட்டாளா?'னு கேட்பாங்க. 

கராத்தே டீச்சர் நாகக்கன்னி

நிறைய பேர் எனக்கு போலீஸ் வேலை கிடைச்சுடுச்சுன்னே பேசிப்பாங்க. இன்னும் தைரியமா நடப்பேன். எம்.ஏ ஹிஸ்டரி முடிச்சுட்டு சப் இன்ஸ்பெக்டர் பரிட்சை எழுதினேன். உடற்தகுதியில் தேர்வான நான், எழுத்துத் தேர்வில் தொடர்ந்து தோல்வியையே சந்திச்சேன். காலமும் கைவிட்டுப் போச்சு. வேலைக்கான வயது வரையறை முடிஞ்சு இனி குவாலிஃபை ஆக முடியாதுனு நிலை வந்தப்ப அழுகையா வந்துச்சு. என் காக்கிச் சட்டை கனவு கலைஞ்சுடுச்சேனு பல ராத்திரிகள் அழுது அழுது தலையணை நனைஞ்சதுதான் மிச்சம். பொதுவாவே பொண்ணுங்க தனியா நடந்தாலே முன்னாடிவிட்டு பின்னாடி கிண்டல் பண்ண ஒரு கூட்டம் வரும். இன்னிக்கு இருக்கும் பாதுகாப்பு அப்போ இல்லை. போரூரிலிருந்து ஆழ்வார்திருநகர் போறதுக்குள்ளே நிறைய கேலி, கிண்டல்களைச் சந்திச்சிருக்கேன். ஒரு புத்தகம் வாங்க போகணும்னாலும் நைட் முழுக்க உட்கார்ந்து, பாதுகாப்பாக எப்படிப் போகணும், எந்த இடத்தில் இறங்கணும்னு பிளான் பண்ணுவேன். அப்போதுதான், தற்காப்புகலை கத்துக்கிட்டா எல்லா இடங்களுக்கும் தனியாக பயமில்லாமல் போகலாமேனு யோசிச்சேன்'' என்கிற நாகக்கன்னி அதன்பிறகே, கராத்தே பயிற்சிக்கு சென்றிருக்கிறார். 

“கராத்தே கிளாஸில் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்பட்ட வித்தியாசத்தை உணர்ந்தேன். நேஷனல் லெவல்ல இரண்டாவது பரிசுகளை இரண்டு முறையும், இன்டர்நேஷனல் லெவல்ல இரண்டாம் பரிசையும் வாங்கினேன். நாம இப்படியே இருந்துடலாம். கல்யாணம் எல்லாம் வேணாம்னு தோணுச்சு. 'பொண்ணுங்க பேன்ட், ஷர்ட் போட்டாலே ஒருமாதிரி பேசுற ஊர்ல என்னை யாரு கல்யாணம் செஞ்சுப்பா?'னு முடிவுப் பண்ணிட்டேன். என் அண்ணன்கள், அக்கா, தங்கை, அம்மா என எல்லோரும் பேசி பேசி சம்மதம் வாங்கினாங்க. அதுக்கப்புறம் கல்யாணம் ஆச்சு. என் கணவரை நினைச்சு ஆனந்தப்படாத நாளே கிடையாதுனு சொல்லலாம். என் எல்லா வெற்றிக்கும் பின்னாடியும் அவரோட உந்துதல் இருக்கும். எனக்கு இப்போ 40 வயசு. இந்த வயசிலும் சுறுசுறுப்பா இருக்கேன். 2002-ம் வருஷத்திலிருந்து கராத்தே பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச பியூட்டி பார்லரை தொடர்ந்து நடத்திட்டு வரேன். என் சொர்க்கமே குடும்பம்தான். எங்களுக்கு ரெண்டுப் பசங்க. மூத்தவன் தருண், ஐந்தாம் வகுப்பும் இரண்டாவது மகன் ஹேமந்த், இரண்டாம் வகுப்பும் படிக்கிறாங்க'' என்கிற நாககன்னி, தனக்கான பெருமையாக சொல்வது...

''என் மாணவர்களில் ஒருவரான ராஜா, முன்னாடியெல்லாம் தெருவில் ஒரு சத்தம் வந்தாலே பயந்து நடுங்குவார். என்கிட்டே கராத்தே கத்துக்கிட்டதும், தெரு பிரச்னைகளை முன்னாடி நின்னு தீர்க்கிறார். வாழ்க்கையில் இதைவிட வேற என்னங்க சந்தோஷம் வேணும்?'' 

கேள்வியோடு அவர் நிறுத்தும்போது, அவர் அணிந்திருந்த கராத்தே சீருடை காக்கிச் சட்டையாக தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement