“கமல் அரசியலுக்கு வருமுன் இதையெல்லாம் செய்வாரா?!” - சுப. உதயகுமார் கேள்வி

சுப.உதயகுமாரன்

சுப. உதயகுமார் பல ஆண்டுகளாக அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தீவிரமான போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அப்போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சுப. உதயகுமார் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், ஒரு கட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியிலும் உதயகுமாரன் இணைந்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் அணு உலை எதிர்ப்பு அமைப்பின் நிர்வாகிகள் போட்டியிட்டனர். கன்னியாகுமரியில் போட்டியிட்ட சுப. உதயகுமார் வெற்றி பெறவில்லை.

தேர்தலின்போதே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், சுப. உதயகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அணு உலை எதிர்ப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று உதயகுமாரன் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சுப. உதயகுமாரும், அவரது இயக்கத்தின் நிர்வாகிகளும் விலகினர்.

குறுக்கு வழி அரசியல்

இது ஒரு புறம் இருக்க  சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 21-ம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த சுப. உதயகுமாரிடம் பேசினோம். "நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. நடிகர் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. ஆனால், திரைப்படத்தின் மூலமாகப் பெற்ற பண பலத்தையும் ஆள் பலத்தையும் வைத்து குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்து அதன் மூலம் வெற்றி பெற நினைக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். நடிகர்கள் முதலில் நடிப்பதை நிறுத்த வேண்டும். பின்னர் மக்களைப் பற்றிய புரிதலுக்கு வர வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். அப்போதுதான் மக்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள முடியும் அதன்பின்னர்தான் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஊழல் மட்டும் முக்கிய பிரச்னையா?

இந்தியாவின் பிரச்னை ஊழல் மட்டும் கிடையாது. குறிப்பாக தமிழகத்தின் பிரச்னை என்பது நமது வளங்களைச் சுரண்டி அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது முதல் பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் இயற்கை வளங்களைச் சுரண்டவோ அவற்றை அந்நிய நாடுகளுக்கு விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. நாங்களும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களைப் பற்றிய புரிதல் இல்லை.

கூடங்குளம் அணு உலை விவகாரம் பற்றிய புரிதல் அவருக்குக் கிடையாது. ‘நடுத்தர மக்கள் பொறியியல் படித்தால் அணு உலையில் வேலை கிடைக்கும். அதனால் அதை எதிர்க்க முடியாது’ என்று எங்களிடம் சொன்னார். அதனால்தான் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பரந்துபட்ட புரிதல் கிடையாது. அவர் இன்று நடிகர் கமலஹாசனைச் சந்தித்திருக்கிறார்.  கமல்ஹாசனுக்கு மக்களைப் பற்றி எதுவுமே தெரியாது. இப்படிப்பட்ட இருவரும் சந்தித்துப் பேசியிருப்பதால், தமிழகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மக்களைப் பற்றிய புரிதலற்ற இவர்களிடம் தமிழக மக்கள் ஏமாந்து விடாமல் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ என்று சுப.உதயகுமார் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!