குறும்படம் மூலமாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தை உணர்த்திய கலெக்டர்!

தேனி கலெக்டர் அலுவலகத்தில், விவசாய குறைதீர்ப்புக் கூட்டம், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், சிறப்புக் கூட்டமாகவே அமைந்தது எனலாம். காரணம், எப்போதும் விவசாயிகளின் குறைகளைக் கேட்டு அதற்கான தீர்வுகளை வழங்கும் கூட்டமாக அல்லாமல், கூட்டம் தொடங்கியவுடன் வேளாண்மைப் பொறியியல்துறையின் சார்பில் வேளாண் இயந்திரமாக்கும் திட்டம் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப்செட் மானியத்தில் வழங்கும் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நவீன  இயந்திரங்கள்குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.​​

ஒவ்வோர் இயந்திரத்தின் படங்களையும் காட்சிப்படுத்தி, அதன் செயல்பாடுகள் முதல் மானியம் வரை அனைத்தும் விவசாயிகளுக்கு விவரிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த விவசாயிகள், இயந்திரங்கள்குறித்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். மேலும், கூட்டத்தின் சிறப்பாக மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில், இயற்கை விவசாயி வெங்கடாசலம் என்பவர் எடுத்த 'பூமித்தாய்' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்குறித்து விளக்கும் அந்தக் குறும்படத்தின்மூலம் விவசாயிகளுக்கு உணர்த்தப்பட்டது. அந்தப் படத்தில், செயற்கை உரங்களைப் பயன்படுத்தி லாபம் கிடைக்காமல் கடன்படும் விவசாயி ஒருவர், கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்ய முயற்சிசெய்து, அதிலிருந்து மீண்டு, இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் பார்த்து, குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், அதன் தற்கால அவசியத்தையும் மாவட்ட விவசாயிகளின் மனதில் பதியவைக்க முயற்சி செய்தார், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம். அதில் வெற்றியும் பெற்றார் என்றே சொல்லலாம். கூட்டத்தில் கலந்துகொண்ட சில விவசாயிகள், இயற்கை விவசாயம் குறித்து வேளாண் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, விவசாயிகளின் குறைகள் கேட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்  தீர்வு கேட்கப்பட்டு, குறைகள்  களையப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் வேளாண் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!