வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (22/09/2017)

கடைசி தொடர்பு:14:15 (22/09/2017)

’நீட் தேர்வுகுறித்து தேவையற்ற கருத்துகளைக் கூற வேண்டாம்’ - அமைச்சர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

'நீட் தேர்வுகுறித்து தேவையற்ற கருத்துகளை ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம்' என்று அமைச்சர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

நீட் தேர்வில் வெற்றிபெறாத மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ’நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று பலமுறை கூறிய வாக்குறுதியை அமைச்சர்களால் நிறைவேற்ற இயலவில்லை. இந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசுத் தரப்பில் பல்வேறு அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர்களின் வாக்குறுதியை நம்பி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலரின் மருத்துவக் கனவு தகர்ந்தது. எனவே, அமைச்சர்கள் கருத்துகள் கூறுவதற்கு முன்னர் பலமுறை சிந்திக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக நீட்டிலிருந்து விலக்கு பெற முயற்சி எடுப்பதாகக் கூறிய அமைச்சர்கள், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவர்களின் நலன் கருதி, இதுபோன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.