கைதின் போதே மெளனம் காத்த தினகரன் இப்போது பி.ஜே.பி. மீது பாய்வதேன்? | This is the reason for ttv Dinakaran lamentation ...

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (22/09/2017)

கடைசி தொடர்பு:21:01 (22/09/2017)

கைதின் போதே மெளனம் காத்த தினகரன் இப்போது பி.ஜே.பி. மீது பாய்வதேன்?

 

தினகரன்

"தமிழக அரசை டெல்லியிலிருந்து சிலர் இயக்குகிறார்கள்'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது எடுத்துரைத்திருக்கிறார் டி.டி.வி தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே. 

அடிபட்டு வலியால் துடிக்கும்போதும்கூட, 'அய்யோ அம்மா...வலிக்குதே' என்று வாய்விட்டுச் சத்தமாகக் கத்தமுடியாத நிலையில் இருந்த டி.டி.வி தினகரன் தரப்பினர் முதல்முறையாக, 'தமிழக அரசியல் குழப்பங்களுக்கெல்லாம் சூத்திரதாரியாகச் செயல்படுவது மத்திய பி.ஜே.பி' என மறைமுகமாகக் குற்றம்சாட்டியிருக்கிறது. 

'தமிழகத்தில் அ.தி.மு.க-வையும், தற்போதைய அரசையும் ஆட்டுவிப்பது, மத்திய பி.ஜே.பி-தான்' என்று கடந்த ஒரு வருடமாகவே தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், அரசியல் ஆர்வலர்களும் நேரடியாகக் குற்றம்சாட்டி வந்தபோதிலும், அதில் தொடர்புடைய அ.தி.மு.க. தரப்பினர் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து மவுனம் காத்துவந்தனர். மத்திய அரசை நேரடியாக விமர்சித்தால், வருமானவரித்துறை ரெய்டு, அமலாக்கத்துறை சோதனை என்று அடுத்தடுத்த சிக்கல்களில் மாட்டி விடுவார்கள் என்ற அச்சத்திலேயே அ.தி.மு.க-வின் அனைத்து அணியினரும் வாய்மூடி மவுனியாக இருந்துவந்தனர்.

எனினும். அ.தி.மு.க.-வில் இரு அணிகளாகச் செயல்பட்ட எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் இணைந்த பின்னர், தினகரன் கூடாரத்தில் இணைந்த 19 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராகக் கவர்னரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். இதனால், அ.தி.மு.க-வில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்

இந்நிலையில், மத்திய அரசை இதுவரை குறைகூறாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மட்டுமே எதிர்த்து வந்த தினகரன் தரப்பு, இப்போது பிரச்னை தலைக்குமேல் போய்விட்டதால், மத்திய அரசுக்கு எதிராகக் களமிறங்கத் தயாராகி விட்டனர் என்றே தெரிகிறது."இப்போதும்கூட 'டெல்லியில் இருந்து தமிழக அரசை யாரோ இயக்குகிறார்கள்' என்று 'ஒருவித பாதுகாப்பு' உணர்வோடு பி.ஜே.பி-யை நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறார்கள் தினகரன் தரப்பினர்"' என்று ரகசியம் உடைக்கிறார்கள் தமிழக எதிர்க்கட்சி வரிசையிலிருப்பவர்கள். இந்தப் பிரச்னையை ஆராய்வதற்கு முன்னால், தமிழகத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த நடப்புகளைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. செப்டம்பர் 22-ம் தேதியான இன்று, கடந்த ஓராண்டில் நடைபெற்றதை அசைபோடலாம்.

2016 செப்டம்பர் 22-ம் தேதியில் ஆரம்பித்து இன்றைய நாள்வரையிலுமான இந்த ஒரு வருட காலத்தில், தமிழக அரசியலில் என்னவெல்லாம் நடந்துள்ளது? யார், யாரை ஆட்டுவிக்கிறார்கள்? போன்றக் கேள்விகளுக்கான பதில் தமிழகத்தின் கடைக்கோடியில் வாழும் பாமரனுக்கும் தெரிந்த விஷயம்தான்! ஆம்...கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அன்றைய தினத்திலிருந்தே தமிழக அரசியல் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் அதுநாள்வரை ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட திட்டங்கள் யாவும், செப்.22-க்குப் பிறகு எந்தவித எதிர்ப்புமின்றி ஒவ்வொன்றாக நுழைந்தன.'‘மத்திய அரசு கொண்டு வரும்  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல்’', '‘மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை அமல்படுத்தினால் தனியார் வங்கிகளும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும்தான் பலன் பெறுவார்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்’', ‘‘நீட் தேர்வுமுறை மாநில அரசின் உரிமைகளை மீறும் செயல். இதனால், தமிழக கிராமப்புற மாணவர்கள், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, பொது நுழைவுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்த விடமாட்டேன்'' போன்ற கருத்துகளை தன் கடிதங்கள் மூலமும், பிரதமர் மோடியிடம் நேரிலும் வாதங்களாக எடுத்து வைத்தார் ஜெயலலிதா. 

மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிரான ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடுகள் அனைத்தும், அவர் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருக்கும்போது, காற்றில் பறக்கவிடப்பட்டன. அவர் சிகிச்சையிலிருந்தபோதே இந்த திட்டங்கள் அத்தனையும் தமிழகத்துக்குள் நிறைவேற்றப்படுதற்கான ஒப்புதலாகி வர ஆயத்தமாகி விட்டன.  "ஒரு முதல்வர் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருந்தபோது, யாருடைய வற்புறுத்தலின்பேரில், முதல்வரால் எதிர்க்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் தமிழகத்துக்குள் வந்தன? அதற்கான அழுத்தம் எங்கிருந்து கொடுக்கப்பட்டது? அழுத்தத்துக்கு அடிபணிந்து அந்தத் திட்டங்களுக்கு ஒப்புதலை வழங்கியவர்கள் யார், யார்?" என்பதுபோன்ற கேள்விகளை ஊடகத்தினரும், அரசியல் விமர்சகர்களும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அதற்கான தெளிவான, நியாயமான பதில்தான் இதுவரை கிடைக்கவில்லை!

இதுதொடர்பாக அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ''ஜெயலலிதா, மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே, தமிழகத்தின் ஆட்சி அதிகாரம்  டெல்லி பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது. மத்திய அரசின் மகுடிக்கு ஏற்ப இங்குள்ள அ.தி.மு.க அதிகார மையங்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன. என்றாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தய அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவுகளால், சசிகலா தரப்பு மட்டும் மத்திய பி.ஜே.பி-யுடனான இணக்கமான(?) வட்டத்திலிருந்து விலகி தற்போது நேரெதிர் திசைக்குப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான், 'தமிழக அரசை டெல்லியிலிருந்து சிலர் இயக்குகிறார்கள்' என்ற வாதம் இப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது"  என்கிறார்கள்.

இப்பிரச்னை குறித்துப்பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத தினகரன் தரப்பு அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், ''18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய பி.ஜே.பி அரசின் தலையீடு இருந்திருக்குமானால், தமிழக மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். தமிழக பொறுப்பு ஆளுநரும் இவ்விஷயத்தில் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்று எங்கள் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் யாருக்கும் பயந்துபோய்விடக் கூடியவர்கள் அல்ல. அதனால்தான், 'நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் வெற்றிகரமாக பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அதுமட்டுமல்ல, 'கதிராமங்கலம்', 'நெடுவாசல்' என்று மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்' என்று அறிவித்ததோடு, போராட்டம் தொடர்பான விஷயங்களையும் வேகமாக முன்னெடுத்து வருகிறார் டி.டி.வி தினகரன்'' என்றார்.

இனிவரும் காலங்களில் மத்திய பி.ஜே.பி. அரசை எதிர்க்க தினகரன் தயாராகி விட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்