வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (22/09/2017)

கடைசி தொடர்பு:17:21 (22/09/2017)

பாதுகாப்பு... பரபரப்பு... ஜெயலலிதா இருந்த அப்போலோ அறை எண் 2008-ன் இப்போதைய நிலவரம்!

அப்போலோ மருத்துவமனை

செய்தித் தொலைக்காட்சிகளில் 'பிரேக்கிங் நியூஸ்' புகழ் மாநிலமாக தமிழகம் உருவெடுத்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. ஆம், கடந்த ஆண்டு இதே நாளில்தான், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஓராண்டு கடந்த நிலையிலும் ஜெயலலிதா விஷயத்தில், அவர் அனுமதிக்கப்பட்ட ஒரு நிகழ்வு மட்டும்தான் இந்த அப்போலோ விவகாரத்தில் உறுதியான ஒரே செய்தி என்பதுதான் மென்சோகம். சிகிச்சைக்காக ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்ட பின்னர் புதிர் பங்களாவாகிப் போன அப்போலோ மருத்துவமனை இப்போது எப்படி இருக்கிறது? நாட்டின் பிரதான குடிமக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் இப்போது என்னதான் நடக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள அங்கு 'ஸ்பாட் விசிட்' அடித்தோம்...

சென்னை சத்யம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறார் ஒரு செய்தியாளர். அப்போது 'சர்... சர்ரென...' அண்ணாசாலையில் வண்டிகள் படுவேகமாகப் பறக்கின்றன. சொல்லிவைத்தாற்போல, எல்லா வண்டிகளுமே கிரீம்ஸ் சாலையில் 'பட் பட்டென' அதேவேகத்தில் திரும்புகின்றன. செய்தியாளருக்கு கை, கால்கள் பரபரக்க....விஷயம் ஊடகங்களுக்குப் பரவுகிறது. அதுதான், இந்த ஓராண்டு மர்மக்கதையின் தொடக்கப்புள்ளி. அன்று ஐ.சி.யு-வில் இருந்த 'பேஷன்ட் அப்பல்லோ' இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா

காற்றில் பறந்துவரும் மருந்துகளின் வாசம், காதுச்சவ்வை கிழிக்கும் வகையில் ஸ்ட்ரெச்சரின் 'க்ரீச்' சத்தம், பரபரக்கும் வண்டிகள்... இப்படியாக வரவேற்கிறது அப்போலோவின் நுழைவாயில். உள்ளே நுழைந்ததும் நேரே முதல் தளத்துக்குச் சென்றோம். அங்கு எக்கச்சக்க கூட்டம். ஒரு காலத்தில் இந்தியாவின் சீனியர் தலைவர்கள் எல்லோரும் இந்தப் படிகளுக்கு அருகே நின்றுவிட்டுத்தான் வெளியே வந்து, "அவங்களைப் பார்த்தோம், ரொம்ப நல்லா இருக்காங்க" என நம்மை நம்ப வைத்தார்கள். இரண்டாவது மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் அடைக்கப்பட்டிருக்க, ஸ்ட்ரெச்சர் செல்லும் பாதை வழியே மேலே ஏறினோம்.

ஏறியவுடனேயே தென்படுகிறது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த சி.சி.யூ (க்ரிடிக்கல் கேர் யூனிட்). இறுக்கப் பூட்டப்பட்டிருந்த கதவுகளுக்கு வெளியே செக்யூரிட்டிகள் கண்கொத்திப் பாம்பாய் எல்லோரையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஜெ. இருந்த 2008-வது அறையில் இப்போது யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளே செல்ல நினைத்தோம். சாதாரண மருத்துவமனைகளிலேயே சி.சி.யூவில் அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டார்கள். அதிலும் அப்போலோவில், சர்ச்சைக்குரிய நிகழ்வு நடந்த இடத்தில்...?! எப்படி அனுமதிப்பார்கள்? வெளியே இருப்பவர்களிடமாவது பேசலாம் என பேச்சு கொடுத்தோம். 

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாம் தளம்

"ஜெயலலிதாவுக்கு இந்த வார்டுலதான் சிகிச்சை கொடுத்தாங்களாம். அதுக்கப்பறம், அவரோட மரணத்தில மர்மம் இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு வரைக்கும் அவருக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல. அவங்க இங்க அட்மிட் ஆகி இருக்கிறப்போ யாருமே உள்ளே வரமுடியாதாம். ஆனா, இப்போ எல்லோருமே சகஜமா இங்க வந்துட்டு போய்ட்டு இருக்கறாங்க. ஆனா, இந்த வார்டைக் கடந்து போகும்போது ஜெயலலிதா, அப்போலோ பரப்பரப்பு, தொலைக்காட்சி பிரேக்கிங் செய்தி எல்லாமே நியாபகத்துக்கு வந்துட்டு போகுது" என்றார்கள்.

அப்போலோவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது "ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சில வாரங்கள் மட்டும், அந்த வார்டு பகுதியில் எந்த நோயாளிகளையும் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது எல்லா மருத்துவர்களாலும் அந்த அறைக்கு மட்டுமல்ல; அந்த தளத்துக்கேச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுகூட, குறிப்பிட்ட சில மருத்துவர்கள்தான் அங்கு செல்ல முடியும். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரின் பெட், அவருக்கு மருத்துவம் பார்க்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் இங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக இங்கு பணிபுரியும் சிலர் சொன்னார்கள். ஆனால், இன்றுவரை நான் அந்தப் பகுதிக்குச் சென்றதில்லை. நான் பணியில் சேர்ந்தே சில வாரங்கள்தான் ஆகின்றன" என்றார்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த வார்டுக்கு முன்பு ஒரு போலீஸ்காரர் காவலுக்காக நின்று கொண்டிருந்தார். 'இங்கு எதற்காகப் பாதுகாப்பு?' என்று கேட்டோம்... "ஒரு குற்றவாளியை இந்த வார்டில், அவசர சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறோம். அதற்காகவே நான் காவல்பணியில் இருக்கிறேன்" என்றார் அந்தக் காவலர்.

காவிரி புஷ்கரத்தில் பழனிசாமி

உடல்நலக் குறைபாட்டால் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதித்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்டது. இப்போது அப்போலோ, எவ்விதச் சலனமும் இல்லாமல் வழக்கமான நோயாளிகளின் வரத்துகளுடன் இயல்பாக இயங்குகிறது. ஆனால், சென்ற ஆண்டு இதே தினத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் என பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் பதவியைக் காத்துக்கொள்ள அப்போலோ வாசலில் திரண்டிருந்தனர். ஜெயலலிதா மீது உண்மையான பாசமும், பற்றும் கொண்டிருந்த ஏராளமான தொண்டர்களும்கூட அப்போலோ வாசலில் ஒருவித பதைபதைப்புடன் காத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தங்களின் தலைவி பூரண உடல்நலத்துடன் திரும்புவார் என்ற நம்பிக்கையுடனும், அதற்காக கடவுளை வேண்டியும் அப்போலோ மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். இப்போது, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள், தங்களின் பதவி நிலைக்கவேண்டி 'காவிரி புஷ்கரத்தில்' நீராடி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் இந்த ஓராண்டில்தான் எத்தனை எத்தனை அரசியல் பிரேக்கிங் நியூஸ்?


டிரெண்டிங் @ விகடன்