கைதிகளுக்கு டிரைவிங் பயிற்சி! முதல்முறையாக சென்னைப் புழல் சிறையில் தொடக்கம்

தமிழக சிறைத்துறையில் முதல்முறையாக, சென்னை புழல் சிறைக்கைதிகளுக்குக் கனரக வாகன டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னைப் புழல் சிறையில் தண்டனைபெற்ற கைதிகளுக்கு, கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பயிற்சியை டெக் மகேந்திரா நிறுவனமும் சீஷா என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து அளிக்கின்றன. இதற்கான தொடக்கவிழா, புழல் சிறையில் நடந்தது. சிறைத்துறைத் தலைவர் மற்றும் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமை தாங்கி பயிற்சியைத் தொடங்கிவைத்தார். சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் வரவேற்றார்.

டெக் மகேந்திரா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லவ்லீன் கெக்கர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், "சிறைக் கைதிகளுக்கு முதல்முறையாக கனரக வாகன டிரைவிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியளிக்க ஒரு கைதிக்கு ரூ.12 ஆயிரம் செலவாகும். ஆண்டுக்கு 300 பேருக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியை முடித்து விடுதலையாகின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படும். சொந்தமாகத் தொழில்செய்ய விரும்பும் கைதிகளுக்குக் கடன் உதவி வழங்க, டெக் மகேந்திரா முடிவுசெய்துள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!