வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (22/09/2017)

கடைசி தொடர்பு:17:00 (22/09/2017)

அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்! - விசாரணை நடத்த கலெக்டருக்கு பரிந்துரை

அரியலூர் மாணவி அனிதா  யாருடைய தூண்டுதலின் பேரிலாவது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டுமென அரியலூர் கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பாக அறிவுறுத்தியுள்ளதாக அதன் துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "மாநகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களுடைய சம்பள பிரச்னை, முன்னணி வங்கி, தாட்கோ ஆகியற்றின்  செயல்பாடுகுறித்து பரிசீலித்துள்ளோம்.  கோவை மாவட்டம் முழுவதும் 96 வழக்குகளில் 348.85 ஏக்கர் பஞ்சமி நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அனைத்து தனியார் பள்ளிகளிலும் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வுசெய்யச் சொல்லியுள்ளோம்.

மேலும், துப்புரவுப் பணியாளர்களுடைய சம்பளத்தை வங்கியில் டெபாசிட் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதை ஒப்பந்ததாரர்கள் மீறினால் அவர்களுடைய உரிமத்தை ரத்துசெய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றவர்,  சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய நிதியில் எவ்வளவு தொகை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதையும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தவர்,

அரியலூர் மாணவி அனிதாவுக்கு வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக்கலூரியிலும், வி.ஐ.டி கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் படிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அனிதாவும் அதில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்வதற்கு ஆயத்தமாக இருந்துள்ளார். இதற்கிடையில், அவர் மனம்மாறி தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன? அவருடைய மனதை மாற்றியவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்துமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியரிடமும், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க