எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொடியசைத்துத் தொடங்கி வைத்த அமைச்சர்!

 

கரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் நான்காம் தேதி நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செய்தி தொடர்பு துறை சார்பில் எம்.ஜி.ஆரின் கலைச் சேவை மற்றும் மக்கள் சேவை தொடர்பான திரைப்படங்களை ஒளிப்பரப்பும் அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மக்கள் செய்தி தொடர்புத்துறை சார்பில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்னணு விளம்பர வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கரூர் மாவட்டத்தில் வருகின்ற 4.10.2017 அன்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, எம்.ஜி.ஆரின் கலைப்பயணம், பொது வாழ்க்கையில் செய்த சாதனைகள் தொடர்பான குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவைகள் எட்டு அதிநவீன மின்னணு விளம்பர வாகனங்கள் மூலம் இன்று முதல் 4.10.2017 வரை மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மக்கள் கூடும் இடங்கள் போன்ற இடங்களில் நாள் ஒன்றுக்கு நான்கு இடங்களில் படக்காட்சிகள் நடத்தத் திட்டமிட்டு, இன்றுமுதல் ஒன்றியத்துக்கு ஒரு வாகனம் என ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒளிப்பரப்பட உள்ளன.

இவ்வாகனங்கள் வாயிலாக விழா நடைபெறும் தகவல்குறித்து கரூர் மாவட்ட நிர்வாக மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட 'காலத்தை வென்றவன்' என்ற குறும்படக் காட்சியின் எம்.ஜி.ஆரின் கருத்தோவியம் மிக்க திரைப்படங்களும் பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட இருக்கிறது. இக்காட்சிகளை பொதுமக்கள் கண்டுகளித்து, வரும் 4.10.2017 அன்று கரூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் உள்ள திருமாநிலையூர் மைதானத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!