வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (22/09/2017)

கடைசி தொடர்பு:19:45 (22/09/2017)

'NO' சொன்ன கமல்... 'OK' சொன்ன கெஜ்ரிவால்..! சந்திப்பின் பின்னணி

கெஜ்ரிவால் மற்றும் கமல்

மீபகாலமாகவே ஊழலுக்கு எதிராகப் பல கருத்துகளைத் தன் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொல்லிவரும் நடிகர் கமல்ஹாசன், தற்போது நடக்கும் அரசியலுக்கு எதிராக சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். இதனால், ஆளும் அ.தி.மு.க தரப்பு, அவர்மீது கோபத்தில் உள்ளது. அதற்காக அதிலிருந்து அவர் விலகாமல் தொடர்ந்து அவர்களை நோகடித்து வருகிறார். கமல்ஹாசனின் இந்தப் புதிய அவதாரத்தால் அரசியலில் கால் பதிக்க தயாராகிவிட்டாரா என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்து வருகிறது. அதுதொடர்பாகத் தனது ரசிகர் பட்டாளத்தையும் அவர் சந்தித்ததும் இல்லை. ஆனாலும் ஊழலுக்கு எதிரான கமலின் அரசியல் பயணம் சூடுபிடித்துள்ளது.

இந்தநிலையில், லோக் ஆயுக்தாவை மையமாக வைத்து உருவான ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று (21-09-2017) ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கமலைச் சந்தித்தார். இவர்களின் இந்தச் சந்திப்பு கமல் ரசிகர்கள் மற்றும் கெஜ்ரிவால் தொண்டர்களுக்கு, ஒருபக்கம் மகிழ்ச்சி கொடுத்தாலும், மறுபக்கம் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவால் மற்றும் கமல்

அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனைச் சந்திக்க சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு தகுந்த மரியாதையோடு வரவேற்பு அளித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் கமலின் மகள் அக்‌ஷரா. இந்தத் தகவலை அறிந்த கமல் ரசிகர்களும், கெஜ்ரிவால் தொண்டர்களும் ஆழ்வார்பேட்டை சாலையே மிகக் கடுமையாக டிராஃபிக் ஆகும் அளவுக்கு அவர் வீட்டை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளான சஞ்சய் சிங், சோம்நாத் பாரதி எம்.எல்.ஏ., தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், கர்நாடக ஒருங்கிணைப்பாளர் பிரித்திவ் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். அனைவருக்கும் கமலின் மகள் அக்‌ஷரா தமிழ்நாட்டு உணவு வகைகளைக் கொண்டு விருந்து உபசாரம் செய்தார். பின்னர், கமல் மற்றும் கெஜ்ரிவால் அரசியல் பேச்சு ஆரம்பித்தது. 

சமீபகாலமாக தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் நாடகங்கள், அரசியல்வாதிகள், தமிழக ஆட்சி நிலவரம் போன்றவற்றைக் கெஜ்ரிவாலுக்கு விளக்கினார். அப்போது, “மக்கள் விரோத ஆட்சியைத் துரத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. நாம் இணைந்து செயல்படவேண்டும்” என்று கெஜ்ரிவால் சொல்லியிருக்கிறாராம். அதற்கு கமல், ''தற்போது அரசியல் பயணம்குறித்து எந்த முடிவும் நான் எடுக்கவில்லை'' என்று நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க ஆயத்தமாயினர். முன்னதாக, "இந்தச் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர் எவ்வித கேள்வியும் கேட்கக் கூடாது" என்ற கட்டளையைத் தன்னுடைய உதவியாளர் மூலம் கமல் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். 

கமலின் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்.

அதன்பின்பே, கமலும், கெஜ்ரிவாலும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வந்தனர். அப்போது பேசிய கமல், "ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவருமே எனது உறவினர்கள்தான். ஊழலை விரட்டியடிக்க வேண்டும்" என்று சொல்ல... பத்திரிகையாளர்கள் சந்திப்பும் வெறும் மூன்று நிமிடங்களுக்குள் முடிந்துபோனது. அதன்பின்னர் கெஜ்ரிவால் கிளம்பத் தயாரானதும், கமல் வாசல்வரை வந்து காரில் ஏற்றிக் கையசைத்துச் சென்றார். காரில் நிர்வாகிகளுடன் சென்ற கெஜ்ரிவால், இந்தச் சந்திப்பில் அதிக மகிழ்ச்சி அடைந்ததாகச் சொல்லியிருக்கிறார். நிர்வாகிகள், ''மீண்டும் ஒருமுறை கமலுடன் சந்திப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்'' என்றுகூற, கெஜ்ரிவாலும் ''ஓகே'' சொல்லி டெல்லி புறப்பட்டுவிட்டார்.

கமல் மற்றும் கெஜ்ரிவால் சந்திப்பால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


டிரெண்டிங் @ விகடன்