முதல்வரின் குலதெய்வக் கோயிலில் கொள்ளை! | Robbery in CM's kuladeiva temple

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (22/09/2017)

கடைசி தொடர்பு:20:06 (22/09/2017)

முதல்வரின் குலதெய்வக் கோயிலில் கொள்ளை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவருடைய அமைச்சர் பெருமக்களும் கடந்த புதன்கிழமை நாகை மயிலாடுதுறையில் உள்ள  துலாக்கட்ட காவிரி ஆற்றில் மகா புஷ்கரம் நீராடி வந்த நிலையில், இன்று அவருடைய குலதெய்வக் கோயிலில் திருட்டுப் போயிருப்பது முதல்வரும் அவரைச் சார்ந்தவர்களும் துர்சகுணமாகக் கருதுகிறார்கள்.


ஈரோடு மாவட்டம், நசியனூர் பைபாஸ் ரோட்டின் ஓரமாக அமைந்திருக்கிறது நசினூர் அப்பாத்தாள் திருக்கோயில். இந்தக் கோயிலுக்குள் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, ரொக்கமாக 95,000 பணமும், 50 ஆயிரம் மதிப்புடைய வெள்ளி பாத்திரங்களையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுப்பற்றி நசியனூரை சேர்ந்த பெரியவர், ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலம் வெள்ளாளக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தில் காடை கூட்டம், கன்னங்கூட்டம், செல்லங்கூட்டம், மணியங்கூட்டம், அழகன்கூட்டம் எனப் பல கூட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி  கன்னங்கூட்டத்தைச் சேர்ந்தவர். இந்தக் கன்னங்கூட்டத்தில் நசியனூர் கண்ணன், காஞ்சிகோவில் கண்ணன், மொடா கண்ணன், பெயர் வைப்பு கண்ணன், காலமங்கலம் கண்ணன், குலநள்ளிகண்ணன், காகம் கண்ணன், பாசூர் கண்ணன் எனப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த உட்பிரிவினருக்குத் தனித்தனியாகக் குலத்தெய்வக் கோயில்கள் இருக்கின்றன.


பழனிசாமி மொடாக்கண்ணன் வகையறாவைச் சேர்ந்தவர். மொடாக்கண்ணன் வகையறாக்களுக்கும், பெயர் வைப்பு கண்ணன் வகையறாக்களுக்கும் சம்பந்தப்பட்ட குலதெய்வக் கோயில்தான் இந்த நசியனூர் அப்பாத்தாள் கோயில். இந்தக் குலதெய்வத்தை வழிபட்ட பிறகுதான் வீட்டில் நல்லது கெட்டது செய்வார்கள். அதுவும் எடப்பாடி பழனிசாமி குலதெய்வத்தின்மீது அதீத பக்தி உடையவர். அமைச்சரான பிறகும் முதல்வரான பிறகும் பல முறை குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தோடு வந்து சாமி கும்பிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.  

இந்தக் கோயிலுக்கு 5 பூசாரிகள் இருக்கிறார்கள். தற்போது பூஜை செய்யும் காணியாச்சி நசியனூரைச் சேர்ந்த சக்தி என்பவர்தான் பூஜை செய்துகொண்டிருக்கிறார். நேற்று இரவு அவர் பூஜை செய்துவிட்டு கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றார். இன்று காலை கோயிலுக்கு வந்து பார்க்கும்போது கேட் கதவுகள் உடைக்கப்பட்டுக் கோயிலுக்குள் இருந்த அலுவலக அறையில் 95,000 ரொக்கப் பணத்தையும், 50,000 மதிப்புள்ள வெள்ளிப் பொருள்களையும் திருடிட்டுப் போயிட்டாங்க.

உடனே இந்தத் தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்ன பிறகு, ஐ.ஜி பாரி, இன்ஸ்பெக்டர்கள் எனப் பலரும் கோயிலுக்கு வந்து பார்த்து விட்டு சென்றிருக்கிறார்கள். கோயிலில் திருட்டுப் போயிருப்பது முதல்வர் பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என மாந்திரிகர்கள் சொல்லி இருப்பதால் இன்று மதியமே கோயிலைச் சுத்தமாகத் தண்ணீர்விட்டு கழுவி புண்ணியசனம் செய்திருக்கிறோம்'' என்றார்.