அணிகள் இணைந்தன... ஆனால்,ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷன்?!

ஜெயலலிதா

டல் நலக்குறைவால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. 75 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவரின் மரணத்தில் இருக்கும் மர்மம் இன்றுவரை நீங்கியபாடில்லை. தமிழக மக்களுக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க-வில் இருக்கும் உறுப்பினர்களுக்கேகூட ஜெயலலிதா சரியாக எந்தநாளில் இறந்திருக்கக்கூடும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயலலிதா உடல்நிலையில் இருந்த பிரச்னைதான் என்ன என்பது பற்றிய விவாதங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. 

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி, கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தனர். பொதுச்செயலாளரான ஒரே மாதத்தில் சசிகலா, தமிழக முதல்வராகப் பதவியேற்க ஏதுவாக, அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகக் கோரி, சசிகலா மற்றும் அவரின் உறவினர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ், சசிகலா தரப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை சசிகலாவுக்கு எதிராக முன்வைத்தார்.

இதற்கிடைய சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசெல்ல நேர்ந்தது. முன்னதாக, தன் அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா. முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றார்.

சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டபோது, "ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; அவரின் போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார். அ.தி.மு.க. சின்னம் முடக்கப்பட்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சின்னத்தை தங்கள் அணிக்குப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க-வின் அணிகள் இணைவதற்கு ஏதுவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்" என்று அறிவித்தார். மேலும், "ஜெயலலிதா வீடு அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றப்படும்" என்றார். ஓ.பி.எஸ். அணி இணைப்வை விரும்பாத தினகரன் தரப்பு தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ-க்கள் அணி திரண்டு, கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் மனு அளித்தனர். 

முதல்வர் வெளியிட்ட அறிக்கை

இந்தச் சூழலில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து தமிழக சட்டசபை சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

இதுஒருபுறமிருக்க, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். அணிகள் இணைப்புக்கு முன்னர், ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு அப்படியே கிடப்பில் உள்ளது. அறிவிப்புக்குப் பின் அதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழக மக்களுக்கு தன் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக, 'ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். அதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்த ஓ.பி.எஸ், அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின் அதுபற்றி வாய்திறக்கவே இல்லை. அணிகள் இணைப்பால் கிடைத்தது துணை முதல்வர் பதவியும், அவரின் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும்தான். "இணைப்புக்காக முன் வைக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவாயிற்று" என்று தெரியவரவில்லை.

ஜெயலலிதா மரணம் அடைந்த உடனேயே, அதில் உள்ள மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும்; மக்களுக்கு உண்மைகளை வெளிக்கொண்டுவர விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து, ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணைய உத்தரவை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி, "ஆணையத்திற்கான நீதிபதி பின்னர் அறிவிக்கப்படுவார்" என்றார். ஆனால், விசாரணை கமிஷன் தொடர்பான அறிவிப்பில், அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரு அணிகள் இணைந்த பின்னர், அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் ஓ.பி.எஸ்ஸூம், ஈ.பி.எஸ்ஸூம் இணைந்தே பங்கேற்கிறார்கள்.

அணிகள் ஒன்றுசேர்ந்து செயல்பட்ட போதிலும், "மாஸ்டர், டீ இன்னும் வரவில்லை" என்பதுபோல, விசாரணை கமிஷன் குறித்த எந்த தகவலையும் அதன்பின்னர் இருவருமே வெளியிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், ஜெயலலிதா விசாரணை கமிஷன் தொடர்பாக எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களின் சந்தேகங்களுக்கும், தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டபோது ஓ.பி.எஸ் கேட்ட கோரிக்கைகளுக்கும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கிறார் முதல்வர். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்தான் என்ன? வெளிவருமா அல்லது இப்பிரச்னையை இத்தோடு மூடி மறைத்து விடுவார்களா? காலம் பதில் சொல்லும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!