Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 

Chennai: 

பங்குச் சந்தையில் முதலீடு குறித்து ஆழம் தெரியாமல் காலை விட்டு, பின் அழுதவர்கள் பல பேர். காரணம், பேராசை, விழிப்பு உணர்வு இன்மை, தவறான வழிகாட்டுதல், அவசரம், தவறான நிதி மேலாண்மை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

முதலீடு,


ஒரு நிலத்தையோ அல்லது தங்கத்தையோ வாங்கிய உடனே அதன் விலை ஏறுவதில்லை. அதைப்போலத்தான் பங்குச் சந்தை. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு ஒரே நாளில் அதன் விலை அதிகரிக்காது. பங்குச் சந்தையில் ஒவ்வொரு பங்குகளின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இதில் எந்த ஒரு காரணங்களுமே அறியாமல் அல்லது தெரியாமல் தினமும் பத்தாயிரத்தை வேண்டுமானால் எளிதாக இழக்கலாம். சம்பாதிக்க முடியாது. பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க, முதலீடு செய்யும் முன் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை கடைப்பிடித்தால் அனைவரும் நல்ல வருமானத்தை ஈட்டலாம். 

புரோக்கிங் நிறுவனம்! 

பங்குச் சந்தையில் பணத்தை முதலில் முதலீடு செய்வதற்கு முன் அவசியம் டீமேட் கணக்கு இருக்க வேண்டும். டீமேட் கணக்கு இருந்தால் மட்டுமே அந்தக் கணக்கை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் டிரேடிங் அல்லது முதலீடு செய்ய முடியும். இதை நீங்கள் எந்த நிறுவனத்தின் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். டீமேட் கணக்கைத் தொடங்கிய பிறகு பங்குச் சந்தையில் வர்த்தகம்/ முதலீடு செய்வதற்கு புரோக்கரேஜ் கட்டணம் என நிறுவனங்கள் வசூலிக்கும். இந்தக் கட்டணம் சரியானதுதானா, அதிகமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த புரோக்கரேஜ் கட்டணத்தை வைத்தே பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆகையால், அவர்கள் முதலீட்டாளர்களிடம் முடிந்தவரை பணத்தை புரோக்கரேஜ் மூலம் வசூலிக்கவே முயற்சிப்பர். சில புரோக்கிங் நிறுவனங்கள் ஆண்டுக்கு இவ்வளவு கட்டணம் முன்கூட்டியே அதிகமான பணத்தை புரோக்கிங் கட்டணமாக வசூலிக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. சந்தையில் சில நிறுவனங்கள் ஜீரோ புரோக்கரேஜ், 20 ரூபாய் என மிகக் குறைந்த விலைக்கும் புரோக்கிங் கட்டணத்தை வழங்குகின்றன. ஆகையால், குறைந்த புரோக்கிங் கட்டணத்துடன் நல்ல சேவை வழங்கும் நிறுவனத்தில் டிரேடிங் அல்லது முதலீட்டை மேற்கொள்ளுங்கள். 

நல்ல நிறுவனப் பங்குகள்! 

பங்குச் சந்தையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும்; பத்தாயிரம் மட்டுமே முதலீடு செய்துவிட்டு தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும்; இழந்த பணத்தை மீட்க வேண்டும்; கடன் வாங்கி, நகையை விற்று பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டு சம்பாதிக்க வேண்டும் போன்ற மனநிலையைத் தவிருங்கள். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதைவிட அதில் இழக்காமல் இருப்பதே மிக முக்கியம். உங்களிடம் உள்ள தேவை இல்லாத பணத்தை மட்டும் முதலீடு செய்யுங்கள். நல்ல நிறுவனமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அந்த நிறுவனப் பங்கின் விலை இறங்கினாலும் கவலைப்படாதீர்கள். மீண்டும் விலை ஏறும், பொறுமையாகக் காத்திருங்கள். தண்டமாக ஒரே விலையில் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் இருக்கும் பங்குகளை தவிருங்கள். அதேநேரத்தில் திடீர், திடீர் என்று வரும் புது நிறுவனங்களில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குறைந்தது எதிர்காலத்தில் ஜொலிக்க வாய்ப்புள்ள ஐந்து நல்ல துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஒவ்வொரு துறையிலும் ஒரு நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நிறுவனத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். 

ஓவுன் டிரேடிங்? 

பங்குச் சந்தை என்பது ஒரு கடல். அந்தக் கடலை பற்றியும், அதன் ஆழத்தைப் பற்றியும் எதுவும் தெரிந்துகொள்ளாமல், கடலில் இறங்கினால் மூழ்கி இறக்க வேண்டுமே தவிர, மாறாக முத்து எடுக்க முடியாது. பங்குச் சந்தை குறித்துத் தெரிந்து கொள்ள ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. இதில் உள்ள பல விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாகப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பங்குச் சந்தையில் பணத்தைப் போட்ட பின், டிரேடிங் அல்லது இன்வெஸ்ட்மென்ட் என எதுவாக இருந்தாலும் நீங்களே சொந்தமாக ஓவுன் டிரேடிங் அல்லது இன்வெஸ்ட்மென்ட் செய்கிறீர்களா அல்லது ஆலோசகரின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ள உள்ளீர்களா என்பதை முடிவு செய்து முதலீட்டைத் தொடருங்கள். ஒரு சிறந்த நிறுவனத்தின் பங்கை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, சிறப்பாகச் செயல்படும் நிறுவனத்தின் பங்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டு லாபம் ஈட்டுங்கள். எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நல்ல ஐந்து துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சிறந்த நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து தொடர்ந்து முதலீட்டினை மேற்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் என நீண்ட கால நோக்கில் முதலீட்டினை மேற்கொண்டால் நிச்சயமாகச் சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம். 

பங்குச் சந்தை குறித்துப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அது ஒன்றும் ஹைடெக்கான விஷயம் இல்லை. மேதாவிகள்தான் பங்குச் சந்தையில் பணம் பண்ண முடியும் என்கிற எண்ணத்தை மூட்டைக் கட்டிவிட்டு, அடிப்படையான சில விஷயங்களைக் கவனித்தாலே போதும், நீங்களும் சம்பாதிக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement