வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/09/2017)

கடைசி தொடர்பு:20:00 (22/09/2017)

25 வயதைத் தாண்டாதவர்கள் நடத்திய இரட்டைக் கொலை! - அதிர்ச்சியில் கோவை!

கோவை, செல்வபுரம் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டுபேர், 25 வயதைத் தாண்டாத இளைஞர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் இரட்டைக் கொலை

 

கோவையை அடுத்துள்ள, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(36). இவர் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்று காலையில் ஆனந்தும், அவருடைய நண்பரான செல்வமும்(36) செல்வபுரம் ஆரம்ப சுகாதர நிலைய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவரையும் சூழ்ந்த  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்த்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த  நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டுவரும் வழியில் செல்வமும் உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தப்பகுதியில் வினோத் என்பவர்  படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கட்டவர்தான் செல்வம். வினோத் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக நடத்தப்பட்ட கத்திக்குத்தில் ஆனந்தும் பலியாகியிருக்கிறார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்த நிலையில், சூர்யா (20) பாபுஜி (22), மோகன்(20), சூர்யா (20) ஆகிய நான்கு பேர் போலீஸில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.