Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிம்னாஸ்டிக்,  ரஜினியுடன் '2.0', ஜோதிகாவுடன்  'மகளிர் மட்டும்', பாடகி... 'வாவ்' மாயா மேஜிக்!

'களிர் மட்டும்' படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்தவர் மாயா எஸ்.கிருஷ்ணன். துறுதுறுவென வலம்வந்து ரசிகர்களைக் கவர்ந்தவரை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் பேசத் தொடங்கினார். 

"என்னுடைய சொந்த ஊர் மதுரை. பன்னிரண்டாம் வகுப்பு வரை மதுரையில் படிச்சேன். பெங்களூரில் இன்ஜீனியரிங் முடிச்சேன். எனக்கு மூணு அக்கா. மூணு பேருக்குமே திருமணமாகி வெளிநாட்டில் இருக்காங்க. அம்மாவும் அப்பாவும் மதுரையில் இருக்காங்க. எங்க வீட்டில் எல்லாருமே செம ஜாலி டைப். எப்பவுமே எங்க வீடு கலகலனுதான் இருக்கும். எங்கே போனாலும் என்னைச் சுற்றி நிறைய நண்பர்களை உருவாக்கிப்பேன். எனக்கு எதிரினு யாருமே கிடையாது. இந்தப் பேட்டி முடியிறதுக்குள்ள நாமலும் நண்பர்களாகிடுவோம்'' என கலகல பட்டாசாகத் தொடர்கிறார். 

மாயா

''என் அக்கா சுவகதா எஸ்.கிருஷ்ணன், பின்னணிப் பாடகி. என் அக்காவின் திருமண அழைப்பிதழைக் கொடுக்கிறதுக்காக ஜேம்ஸ் வசந்தன் சாரைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் என்னைப் பார்த்துட்டு, 'நான் 'வானவில் வாழ்க்கை'னு ஒரு படம் எடுக்குறேன். அதில், முழுக்க முழுக்க சிங்கர்ஸ்தான் நடிக்கிறாங்க. படத்தின் பாடல்களையும் அதில் நடிக்கிறவங்களே பாடணும். நீங்க என் படத்தில் நடிக்கிறீங்களா?'னு கேட்டார். எனக்கு இன்ஜீனியரிங் படிப்பு கொஞ்சமும் பிடிக்கலை. என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டிருந்தப்போ கிடைக்கும் இந்த சான்ஸை மிஸ் பண்ணக்கூடாதுனு ஓகே சொல்லிட்டேன். அந்தப் படத்துக்காகவே 'பாய் கட்' பண்ணிக்கிட்டேன். அந்த ஹேர்ஸ்டைலையே என் அடையாளமாக மெயிண்டெயின் பண்ணிட்டிருக்கேன். 

ஒரு நிமிஷம்... . 'மகளிர் மட்டும்' இயக்குநர் பிரம்மா, 'உன்னுடைய ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன். உனக்காகவே படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கியிருக்கேன்' எனச் சொன்னதும் அவ்வளவு சந்தோஷம்'' என்கிற மாயா, 'மகளிர் மட்டும்' படத்தின் நெகிழ்வுகளைப் பகிர்கிறார். 

மாயா

''ஜோதிகா மாதிரி ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவங்களைச் சுற்றி இருக்குற எல்லாரையும் பற்றி யோசிப்பாங்க. தான் ஒரு பெரிய ஸ்டார் என்கிற பந்தாவே இருக்காது. எல்லாரையும் ஒரே மாதிரி நடத்துவாங்க. ஜாலியா பேசுவாங்க. பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா மேடம்களும் செட்ல ரொம்ப எளிமையா நடந்துப்பாங்க. ஒவ்வொரு ஷாட்டையும் ரசிச்சு ரசிச்சு பண்ணுவாங்க. நல்லா நடிக்கறேனு மனசுவிட்டு பாராட்டுவாங்க. அதுதான் எனக்குப் பெரிய எனர்ஜியா இருந்துச்சு. நான் சூர்யாவின் தீவிர ரசிகை. ஸ்கூல் படிக்கும்போது அவர் போட்டோ இருக்கும் பேப்பர் கட்டிங்ஸ், வால்போஸ்டர் எனச் சேகரிப்பேன். ஜோதிகா மேமைப் பார்த்ததும், 'உங்களுக்குக் கல்யாணமான நாளில் நான் சாப்பிடாமல் அழுதுட்டே இருந்தேன். அந்த அளவுக்கு என் கிரஷ், சூர்யா சார்'னு சொன்னதும், சிரிச்சுட்டாங்க. 

மாயா

அப்புறம்... 'எந்திரன் 2.0' படத்தில் ரஜினி சாரோட நடிச்ச அனுபவத்தை மறக்கவே முடியாது. ரஜினி சாரைப் பார்க்கிறதே பெரிய விஷயம்னு நினைச்சுட்டிருந்த எனக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சதும் றெக்கை கட்டி பறந்தேன். தியேட்டர் பிளே சமயத்தில் 'கபாலி'னு ஒரு கேரக்டர் பண்ணினேன். அது செம காமெடி கேரக்டர். கெளதம் வாசுதேவ மேனன் சார் அந்த கேரக்டரைப் பார்த்துட்டு, 'சூப்பரா நடிச்சீங்க'னு பாராட்டினார். எனக்குப் பிடிச்ச தியேட்டர் பிளேயை எப்பவும் விடமாட்டேன்'' என்கிற மாயா, 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்துவருகிறார். 

''சிம்ரன் மேம், விக்ரம் சார் என பெரிய பெரிய தலைகளோடு நடிக்கிறேன். ஒவ்வொருத்தரிடமிருந்தும் ஒவ்வொரு விஷயங்கள் கத்துக்கிட்டு பயணப்பட்டுட்டிருக்கேன். அப்புறம் என்ன சொல்றது? ஆங்... நான் 'கிளவுனிங் தெரபி' பண்ணுவேன். குழந்தைகள் மருத்துவமனைக்குப் போய் அங்குள்ள குழந்தைங்கள் முன்னாடி நடிச்சுக் காட்டுவோம். அந்தக் குழந்தைகளும் வலியை மறந்துட்டு மகிழ்ச்சியோடு துள்ளி குதிப்பாங்க. அதைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். நான் ஜிம்னாஸ்டிக் பிளேயரும்கூட. தேசிய அளவிலான போட்டியில் ஆறாவது இடம் பிடிச்சேன். ஒருவேளை சினிமாவுக்கு வராதிருந்தால், ஜிம்னாஸ்டிக் பிளேயராவோ, சிங்கராவோ ஆகிருப்பேன்'' என்கிற மாயா, தான் பாடிய வீடியோக்களை முகநூலில் வெளியிட்டு லைக்ஸ்களை குவிக்கிறார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement