வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (22/09/2017)

கடைசி தொடர்பு:20:33 (22/09/2017)

எட்டாம் வகுப்பு வரை விளையாட்டு வகுப்பே இல்லை... இப்போது யோகா வகுப்பா?  - ஓர் அலசல்!

யோகா


'மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், உடல் மற்றும் மனம் வலிமை ஏற்படுவதற்கும் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்' என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவை வழங்கும் விழாவில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார் முதல்வர். 'இது இந்துத்துவத்தை பரப்பும் முயற்சி. மோடியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆட்சி நடைபெறுவதற்கான மற்றொரு சாட்சி' என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர், யோகா கலை பயிற்றுநர், மருத்துவர் ஆகிய துறைகளின் நிபுணர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதிலிருந்து... 

சுடரொளி 

“யோகாவில் பல வகைகள் உண்டு. இவர்கள் அதில் எந்த வகையைச் சொல்லித்தரப்போகிறார்கள்? அதோடு இணைந்து மந்திரம் போன்ற விஷயத்தைப் புகுத்தி மதச் சாயம் பூசப்போகிறார்களா? அரசாங்கம் கொடுத்திருக்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான அட்டவணையில், விளையாட்டு வகுப்புகளே இல்லை. உணவு உண்ணும்போதும் சொல்லித்தர வேண்டிய பாடங்கள் குறித்த வழிமுறைகளே ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் விளையாட்டு வகுப்புகளே இருக்கின்றன. அந்த வகுப்புகளும் விளையாட்டுக்கா அல்லது அப்போதும் பாடங்கள் நடத்தலாமா என்பதை ஆசிரியர்களே தீர்மானிக்கிறார்கள். இந்த நிலையில், எந்த நேரத்தில் யோகாவைச் சொல்லித் தரப்போகிறார்கள், இதற்கான பாடத்திட்டம் என்னவாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள், குழப்பங்கள், நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன” என்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியை சுடரொளி. 

டாக்டர்

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அரவிந்தன் சிவகுமார், “இங்கே மொத்த கல்வி அமைப்புமே தவறாக இருக்கிறது. மனப்பாடம் செய்யும் கல்வி முறை, நீட் போன்ற போட்டித் தேர்வுகளால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதை மறைக்கவும், ஏதோ சில தனிப்பட்ட மாணவர்களிடம் இருக்கும் கோளாறு என்பதுபோல, யோகா மூலம் சரிசெய்ய நினைக்கிறார்கள். இந்தக் கல்வி அமைப்பை மாற்றாமல், இதுபோன்ற நடவடிக்கைகள் பயன் தரப்போவதில்லை” என்கிறார்.

”சிறுவயதில்தான் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுடைய வளைந்துகொடுக்கும் தன்மைக்கு ஏற்றார்போல யோகா பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அதற்கென தனியாகப் பாடத்திட்டம் தேவை. அது இன்னும் வரையறுக்கப்படவில்லை. யோகா படித்த பட்டதாரிகளே நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு அவர்களைப் பயன்படுத்தாமல், புதிதாக யாரையாவது தயார்படுத்தினால் யாருக்கும் பயனில்லாமல் போகும். உதாரணமாக, ராம்தேவ் போன்ற சாமியார்களிடம் கொடுக்கப்பட்டால், இதற்கு மதச்சாயம் பூசப்படும்” என்று கவலை தெரிவிக்கிறார், 50 வருடங்களுக்கு மேலாக யோகா பயிற்றுநராக இருக்கும் ஆசன ஆண்டியப்பன். 

2015-ம் ஆண்டு, யோகா தினத்துக்காக, மத்திய அரசின் குறுகிய கால ஒப்பந்த வேலைக்கு விண்ணப்பித்த 771 இஸ்லாமிய யோகா ஆசிரியர்களில் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களே இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து நடக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. மாற்றுக் கருத்துகளை அரசு கவனத்தில் கொள்ளும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்