பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி..  விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்..  நடந்தது என்ன? | accused released in koyambedu child molestation case

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (23/09/2017)

கடைசி தொடர்பு:10:07 (23/09/2017)

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி..  விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்..  நடந்தது என்ன?

சிறுமி

ரணிக்குக் கடத்தப்பட்டுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவர்மீது தவறில்லை எனப் போலீஸார் விடுதலை செய்துள்ளனர். இது பொதுமக்களுக்கு ஒருவித சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிபவர் லெட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் ஆறுமுகம் இரண்டு வருடங்களுக்கு முன் மரணமடைந்துவிட்டார். லெட்சுமிக்கு 14 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கென்று சொந்தமாக வீடு இல்லை. கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள பிளாட்ஃபார்மில்தான் தங்கி வருகின்றனர். இந்நிலையில், மூத்த மகள் திடீரென காணாமல் போய்விட்டார். மகள் காணாமல் போனது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் லெட்சுமி. ஆனால், காவல் துறையினர் அவரை அலட்சியப்படுத்தியதுடன் புகாரை வாங்காமலும் திருப்பியனுப்பியுள்ளனர். அதனால் மனமுடைந்த லெட்சுமி தனியாகப் பல இடங்களில் மகளைத் தேடியுள்ளார். ஆனால், அவரது மகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் லெட்சுமி. அதில், “9-ம் வகுப்பு படித்துவரும் 14 வயதான என் மகள், கடந்த மாதம் காணாமல் போய்விட்டாள். அவரை நான் பல இடங்களில் தேடினேன். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு எனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த குமார் என்பவர் என் மகளை என்னிடம் ஒப்படைத்தார். அப்போது என்மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அதுகுறித்து அவளிடம் விசாரித்தேன். அப்போது ஆரணியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சித்ரா என்பவர் என் மகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்துவைத்துள்ளார். பின்பு, ஆரணியில் உள்ள அரசு மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் என் மகளுக்கு மயக்க ஊசிபோட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்’’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

டாக்டர் ஜெயபிரகாஷ்

டாக்டர் ஜெயபிரகாஷ்

‘’இதுபற்றிய விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க வேண்டும்’’ என்று சென்னை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அதனால் திருமங்கலம் காவல் துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க ஆரணிக்கு விரைந்தனர். அங்கு, அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரைப் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைக் காக்கும் ‘பாக்சோ சட்டம்’ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஆரணி பையூரை சேர்ந்த சித்ராவும், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷும் தலைமறைவாகினர். அதன்பின்னர் கடந்த 11-ம் தேதி சித்ரா, ‘’இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’’ என்று சொல்லி, ஆரணி தாலுக்கா அலுவலகம் முன்பு தனது இரண்டு மகன்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதிலிருந்து அவரை மீட்ட போலீஸார், பின்னர் கைதுசெய்தனர். பின்னர் சுரேஷ் மற்றும் அவருக்கு நெருங்கிய பழக்கமுடைய கோட்டீஸ்வரி ஆகிய இவர்களையும் போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், ‘’சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷுக்கும், அவரது உதவியாளர் பாண்டியனுக்கும் இந்த வழக்குத் தொடர்பாக எந்தச்  சம்பந்தமும் இல்லை’’ எனக் காவல் துறையினர் தெரிவித்து அவர்களை விடுதலை செய்துள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் விசாரித்தோம். “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்து வந்தோம். பின்னர், சிறுமியை அழைத்துவந்து விசாரித்ததில்... மருத்துவர் ஜெயப்பிரகாஷுக்கும், அவரது உதவியாளர் பாண்டியனுக்கும் இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை என அவர் கூறியதால், அவர்கள் இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்துவிட்டோம். சித்ரா, சுரேஷ், கோட்டீஸ்வரி ஆகிய மூவரும் சேர்ந்துதான் சிறுமியை பாலியல் தொழிலுக்குத் தள்ள திட்டம் தீட்டியுள்ளனர்'' என்றவர்களிடம், ‘’லெட்சுமியையும், அந்தச் சிறுமியையும் நாங்கள் பார்க்க வேண்டும்’’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இந்த வழக்குக் கோர்ட்டுக்கு வரும்வரை எங்களால் எந்தப் பதிலும் தர இயலாது. அவர்கள் இருவரும் எங்கள் கண்காணிப்பில்தான் இருக்கிறார்கள்’’ என்று முடித்துக்கொண்டனர்.

‘’சிறுமியின் தாய் லெட்சுமி, ஆரம்பத்தில் புகார் அளிக்கும்போது மருத்துவர் ஜெயப்பிரகாஷைத்தான் முதன்மையான நபராகச் சேர்த்திருந்த நிலையில், தற்போது அவருக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை எனப் போலீஸார் சொல்லி அவர்களை விடுதலை செய்திருப்பதில் ஏதோ உண்மை மறைக்கப்படுவதாகவே தெரிகிறது’’ என்கின்றனர் லெட்சுமியுடன் கோயம்பேடு மார்கெட்டில் தங்கி இருப்பவர்கள்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சித்ரா

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சித்ரா

“மகள் காணாமல் போனதிலிருந்து சரியா வேலைக்கு வராமல் மகளையே தேடிக்கிட்டு இருந்தா. போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தும் வாங்கலைனு சொன்னா. மகளைத் தேடுறதுல ரொம்ப கஷ்டப்பட்டா. அப்போ திடீர்னு ஒருநாள் அவ பொண்ணு கிடைச்சதும் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனா. என்ன ஏதுனு எங்ககிட்ட சொல்லவே இல்லை. அப்புறம் போலீஸ் இங்க வந்து விசாரிச்சாங்க. அதுக்கப்பறம்தான் உண்மை என்னனு தெரிய ஆரம்பிச்சது. இந்த வழக்கைப் பத்தி எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. ஆனா முதல் நாள் புகார் கொடுக்கும்போது டாக்டர் பெயரைத்தான் முதல் நபரா சேர்த்திருந்தா. பொண்ணு சொல்லித்தான் அவளுக்கு இந்த விஷயம் தெரியும். ஆனா, இப்போ போலீஸ்காரங்க அந்த வழக்குக்கும் டாக்டருக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்லி விடுதலை பண்ணியிருக்காங்க. இதுல ஏதோ சதி நடந்திருக்கு. எதையோ எல்லாரும் ஒண்ணுசேர்ந்து மறைக்கப் பாக்குறாங்க” என்றனர் லெட்சுமியுடன் வேலை பார்த்தவர்கள்.

இதுகுறித்து மருத்துவர் ஜெயப்பிரகாஷிடம் பேசியபோது, “நான் அந்தச் சிறுமியைப் பார்த்தது கூட இல்லை. எனக்கும் இந்த வழக்குக்கும் துளிகூடச் சம்பந்தம் கிடையாது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அந்தச் சிறுமி முன்பு என்னையும், என் உதவியாளர் பாண்டியனையும் விசாரித்தார்கள். அப்போது அந்தச் சிறுமி, 'எங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை' எனக் கூறிவிட்டார். அதனால், என்னையும் எனது உதவியாளர் பாண்டியனையும் இந்த வழக்கிலிருந்து காவலர்கள் விடுதலை செய்துவிட்டனர். இந்த வழக்குக்கு சம்பந்தமானவர்களைக் காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்”. 

சித்ரா, சுரேஷ், கோட்டீஸ்வரி ஆகிய மூவரும் சேர்ந்துதான் சிறுமியைப் பாலியல் தொழிலுக்குத் தள்ள திட்டம் தீட்டியவர்கள் என்று சொல்லும் காவலர்கள், அந்தச் சிறுமியையும் அவருடைய தாயாரையும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தும் போலீஸார் தடுப்பதன் மர்மம் என்ன? பாதிக்கப்பட்ட சிறுமி பிளாட்ஃபார ஏழை என்பதாலா?

 


டிரெண்டிங் @ விகடன்