வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (22/09/2017)

கடைசி தொடர்பு:20:46 (22/09/2017)

இரட்டை இலைச் சின்னம் இறுதி விசாரணை தேதி மாற்றம்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை, வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அ.தி.மு.க-வில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

இரட்டை இலை

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. இதுதொடர்பாக, லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள், கடந்த மாதம் இணைந்தன. இதற்கிடையே," விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்"என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி, இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது விசாரணை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி இரட்டை இலைச் சின்னம் தொடர்பான  இறுதி விசாரணையை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.