கரூரில் பெண்ணுக்கு வீடு புகுந்து பாலியல் தொந்தரவு..!

கரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த பெண்ணிற்கு ஒருவர் வீடு புகுந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவேன் என்றும் ஆள் வைத்து மிரட்டியுள்ளார். 

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூர் பஞ்சாயத்தில் இருக்கும் தெலுங்குபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. எல்.ஐ.சி ஏஜென்டான இவரது மனைவி தமிழ்செல்வி. சம்பவத்தன்று இரவு இவர்கள் தங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த அம்மாசி என்பவர் பழனிச்சாமி வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த தமிழ்செல்வியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்து தடுக்க வந்த பழனிச்சாமி தலையில் டார்ச் லைட்டால் கடுமையாக தாக்கியதோடு, 'இதை வெளியில் சொன்னால் உங்கள் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.

காயமடைந்த தனது மனைவி தமிழ்செல்வியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் 100 எண்ணின் மூலம் புகார் செய்துள்ளார். இதுகுறித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து கரூர் எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் சென்றுள்ளது. எஸ்.பி அலுவலகத்திலிருந்து தோகைமலை போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்செல்வியிடம் தோகைமலை போலீஸார் புகார் பெறச் சென்றனர். 

இந்நிலையில், செங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அம்மாசிக்கு வேண்டிய பத்துக்கும் மேற்பட்ட கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆட்கள், 'போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கலன்னா,குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம்' என்று பழனிச்சாமியை மிரட்டியுள்ளனர். பயந்துபோன அவரும்,போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். மருத்துவமனையில் இருந்த தமிழ்ச்செல்வியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்த பழனிச்சாமியை அதே கட்டப்பஞ்சாயத்து கும்பல் மறுபடியும் வழிமறித்து, 'இந்த பிரச்னையை இத்தோடு விட்டுவிட வேண்டும். யாரிடமாவது புகார் கொடுக்கனும்ன்னு மறுபடியும் முயற்சி செஞ்சா உங்க ரெண்டு பேர் தலையும் ரோட்டுல கெடக்கும்' என்று மிரட்டியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த பழனிச்சாமி, அவர் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அம்மாசி மீதும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குளித்தலை டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!