தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ. கீதாஜீவன்..! | Thoothukudi municipal corporation siege by MLA Geetha Jeevan

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (22/09/2017)

கடைசி தொடர்பு:22:07 (22/09/2017)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ. கீதாஜீவன்..!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அந்தத் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Thoothukudi municipal corporation

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி வார்டுகளில் நிலவி வரும் பல குறைகளை சீர்செய்ய ஆணையாளரிடம் மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். அதில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை எம்.எல்.ஏ. கீதாஜீவன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். 

Siege of municipal

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. கீதாஜீவன், 'மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட 1 முதல் 5-வது வார்டுகள், 17, 18, 34 மற்றும் 48 முதல் 60-வது வார்டு என 20 வார்டு பகுதியிலுள்ள வீடுகளுக்கு 4-வது பைப்லைன் மூலம் குடிநீர் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இந்தப் பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு, மழைநீர் வடிகால் வசதி என எதையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் தீர்வைக் கட்டணத்தை மட்டும் ஆண்டுக்கு 2 மடங்கு கூட்டி வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சாலைவசதி, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கு தீர்வை போட முடியவில்லை. அந்தந்த வார்டு பகுதிகளில் முக்கிய இடங்களில் எழுதப்பட்டு வந்த தண்ணீர் வரும் நாள், கிழமை, நேரம் ஆகியவை முறையாக எழுதபட்டு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இது மக்களுக்கு வசதியாகவும் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக இதுகுறித்த அறிவிப்பு ஏதும் மக்களுக்கு தெரிவிக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். இதைப் பழையபடி முறைப்படுத்த வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு என்ற பெயரில் மக்களிடம் அபராதம் வசூலிப்பது நிறுத்தப்படவேண்டும்.

Siege of municipality

குப்பை அள்ளும் வாகனம், கழிவு நீர் அடைப்பை சரிசெய்யும் வாகனம், மணல் அள்ளும் வாகனம், நாய் பிடிக்கும் வாகனம் ஆகிய வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டும் அவற்றை முறையாகப் பராமரிக்காமலும், பயன்படுத்தாமலும் மாநகராட்சிப் பொறியியல்துறை வளாகத்தில் கண்காட்சிக்கு வைத்தது போல அடைகட்டி நிறுத்தப்பட்டுள்ளது. அதை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தெருவிளக்குகள் அமைப்பதற்காக 8.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பயன்படுத்தப்படவில்லை. இவைகுறித்து ஆணையாளரிடம் மனு அளித்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என மாநகராட்சின் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க