ஜாக்டோ- ஜியோ அடுத்து என்ன செய்யப்போகிறது...? மதுரையில் ஆலோசனைக் கூட்டம் | The jacto Geo high level consultation meeting in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 22:25 (22/09/2017)

கடைசி தொடர்பு:22:25 (22/09/2017)

ஜாக்டோ- ஜியோ அடுத்து என்ன செய்யப்போகிறது...? மதுரையில் ஆலோசனைக் கூட்டம்

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம், உயர்நீதிமன்ற உத்தரவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜராகி விளக்கமளித்தார். ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளும் ஆஜராகினர். இந்நிலையில், ஜாக்டோ- ஜியோ மாநில நிர்வாகிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று மதியம் மதுரையில் கூடியது. பல்வேறு விஷயங்களை விவாதித்தவர்கள், இறுதியாக நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

ஜாக்டோ

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ''உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதற்காக இன்று கூடியுள்ளோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று  ஆசிரியர்களை, அரசு ஊழியர்களைச் சந்தித்து நடந்தவற்றை விளக்கிக் கூற உள்ளோம். தற்காலிகமாக 23.10.17 வரை அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளையும்  நிறுத்தியுள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பை அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்போம். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை  ஐனநாயக முறையில் எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க