நொய்யலாற்றில் பொங்கிய வெள்ளை நுரை - அமைச்சரின் அடடே விளக்கம்!

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்தவாரம் அலையலையாக நுரை பொங்கி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உண்டாக்கியிருந்தது. திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகள், சட்டவிரோதமாக, திட்டமிட்டே நொய்யலாற்றில் கழிவுநீரை கலந்துவிட்டதால்தான், இப்படி நுரை பொங்கி ஓடியதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இன்று அதுதொடர்பான ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சாய, தொழிற்சாலைகள் மற்றும் தனியார், பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து பேசினர்.

விழாவில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், " அரசாங்கம் நடத்துவதற்கு வருவாய் என்பது மிக அவசியம். அந்த வருவாய் திருப்பூர் மூலம் அரசுக்கு நிறையவே கிடைக்கிறது. கடந்த 2010-ல் நொய்யலாற்றுத் தண்ணீர் 7000 டி.டி.எஸ் அளவு வரை இருந்தது. ஆனால், தற்போது  டி.டி.எஸ்ஸின் அளவு பலமடங்கு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய சம்பவத்தை ஏதோ பெரிய தவறு நடந்துவிட்டதைப் போன்று ஊடகங்கள் சித்திரிக்கிறார்கள்.

 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில்  நிலவிய வறட்சியின் காரணமாக, கோவை பகுதிகளில் தேங்கிய சாக்கடைக் கழிவுகள், தற்போதைய மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு நொய்யலில் நுரை பொங்கியதே தவிர, சாய ஆலைகள் யாரும் தவறு செய்துவிட்டதாக தெரியவில்லை. எனவே, சாய ஆலை உரிமையாளர்கள் அதைப்பற்றி யோசித்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்காமல், தைரியமாக தொடர்ந்து தொழில் செய்யுங்கள். இந்த அரசு உங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டே இருக்கும்" என்றார். பின்னர் ஊடங்கங்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், "தவறு செய்யும் சாய ஆலைகளை மட்டும் ஊடகங்கள் சுட்டிக்காட்டினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்த சாய ஆலைகளையும் குறைகூறுவது திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு நல்லதல்ல" என்றார்.

சுற்றுச் சூழல்துறை அமைச்சருக்கு  நொய்யலாற்றைவிட சாய ஆலை அதிபர்கள்மீது தான் அக்கறை அதிகம்போல...!

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!