மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் திருப்பூர்..! - தீவிர கண்காணிப்பில் கியூ பிரிவு போலீஸ்..!

கடந்த காலங்களில், மாவோயிஸ்ட் மற்றும் தடைசெய்யப்பட்ட இதர இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, திருப்பூரில் தங்கி வேலைபார்த்த சிலரை, ஏற்கெனவே கைதுசெய்திருக்கிறது காவல்துறை. இந்நிலையில், தற்போது மீண்டும் திருப்பூரை மையமாக வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர், கியூ பிரிவு காவல் அதிகாரிகள்.

தடை செய்யப்பட்ட 'பீப்பிள் லிபரேஷன் கொரில்லா ஆர்மி' என்ற அமைப்பின் கமாண்டராகச் செயல்பட்டுவந்த காளிதாஸ் என்பவரை, நேற்று முன்தினம் கேரள போலீஸார் கைதுசெய்திருந்தனர். 14 ஆண்டுகளாக காளிதாஸை தேடிவந்த கேரள காவல்துறையினர், கோவை - கேரள எல்லைப் பகுதியான அகளி என்ற இடத்தில் வைத்து அவரை மடக்கிப்பிடித்தனர்.

தமிழக-கேரளப் பகுதிகளில் தங்கியிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்குப் பயிற்சியளித்தவர் என்ற முறையில், காளிதாஸிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட கியூ பிரிவு போலீஸார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், தற்போது கோவை மற்றும் திருப்பூர் வட்டாரங்களில் தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வனப்பகுதி, சிறுவாணி அணை, மாங்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் கியூ பிரிவு போலீஸார், திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை, அமராவதி வனப் பகுதிகள் மற்றும் திருப்பூரின் மாநகரப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். திருப்பூர்  மாநகரப்  பகுதிகளில் செயல்பட்டுவரும் பின்னலாடை நிறுவனங்கள், தங்களின் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதால், அவ்வாறான இடங்களில் போலீஸாரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!