தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்! 7,500 பேர் பங்கேற்பு

சுத்தம் செய்யும் மாணவிகள்

தாமிரபரணி ஆற்றைச் சுத்தம்செய்யும் பணிகள் இன்று தொடங்கியது. இதில், 7,500 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று, நதிநீரைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், நதிநீர் சிக்கல் இல்லாத ஆறு, தாமிரபரணி. தமிழக எல்லையில் தோன்றும் இந்த ஆறு, தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பயணித்து கடலில் கலக்கும் இந்த ஆற்றில் மாசுக்கள் கலப்பதால், சீர்கேடு அடைந்துள்ளது. அதனால், இந்த ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றன.

தாமிரபரணி ஆற்றில் விழிப்பு உணர்வு

பொதிகை மலையின் உச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, சமவெளிப் பகுதிக்கு முதன்முதலாக வரக்கூடிய பாபநாசம் பகுதியில் தொடங்கி, நெல்லை சந்திப்பு வரையிலுமான இடங்களில் ஆற்றைச் சுத்தம்செய்யும் பணிகள் இன்று நடந்தன. கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்ற இந்தப் பணிக்காக 60 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அதில், 7,500 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆற்றின் உள்ளே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது, கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார். இதில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான கே.ஆர்.பி.பிரபாகரன் கலந்துகொண்டார். சுத்தம்செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படும் வகையில் பேரணியைத் தொடக்கிவைத்தார்.

ஆட்சியர்

தாமிரபரணி ஆற்றின் வழிநெடுகிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இந்தப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, ஜூன் மாதத்தில் முதல்கட்டமாக ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்த நிலையில், தற்போதைய 2-ம் கட்ட தூய்மைப் பணியால், ஆற்றின் கழிவுகள் சுத்தப்படுத்தப்பட்டது. அத்துடன், தாமிரபரணி ஆற்றின் முக்கியத்துவம்குறித்த விழிப்புஉணர்வு, வழிநெடுகிலும் இருக்கும் கிராம மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் இனியும் ஆற்றை அசுத்தம் செய்ய மாட்டார்கள் என்கிற நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!