காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு முகாம் - ராமநாதபுரம் எஸ்.பி அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில், காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டான  சிறப்பு முகாம்களை நடத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்


ராமநாதபுரம் மாவட்டத்தில், இதுவரை காணாமல்போன 119 நபர்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 115 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, நிலுவையில் இருந்துவருகிறது. இந்நிலையில், கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவரும் மேற்படி 119 நபர்களையும் கண்டுபிடிக்கும் பொருட்டு, இன்று முதல் உட்கோட்டங்கள் வாரியாக சிறப்பு முகாம் நடத்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த சிறப்பு முகாம்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காப்பகங்களின் பராமரிப்பில் இருந்துவரும் நபர்களது புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத, இறந்த நபர்களது புகைப்படங்களுடன் ஒப்பிட்டு, அர்களை அடையாளம் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்க அல்லது காணாமல் போனவரின் நிலையினை உறவினர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் இன்று தொடங்கிய இந்த சிறப்பு முகாம், இம்மாதம் 24-ம் தேதி ராமேஸ்வரம் கோயில் காவல் நிலையம், 25-ம் தேதி கமுதி, 26-ம் தேதி முதுகுளத்தூர், 27-ம் தேதி கீழக்கரை, 28-ம் தேதி திருவாடானை, 29-ம் தேதி பரமக்குடி தாலுகா காவல் நிலையங்களில் நடக்க உள்ளது.  முகாம் நடைபெறும்  நாள்களில்  சம்பந்தப்பட்ட உட்கோட்ட சரகங்களில் வசித்துவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிறப்பு முகாம்கள் நடைபெறும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று, கலந்துகொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!