வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (23/09/2017)

கடைசி தொடர்பு:20:35 (23/09/2017)

'கலை எனும் பெயரில் ஆபாசமாக நடனம் ஆடுவதை ஏற்க முடியாது!' - நீதிமன்றம் உத்தரவு !

'கோயில்களில் நடைபெறும் கலாசார கலை நிகழ்ச்சிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், கலை எனும் பெயரில் ஆபாசமாக நடனம் ஆடுவதை ஏற்க முடியாது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

குலசை

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை ஓரம் உள்ள குலசேகரப்பட்டினத்தில்,முத்தாரம்மன் கோயில் உள்ளது. அங்கு நடைபெறும் 10 நாள் தசரா விழா, மிகவும் புகழ்பெற்றது. சூரசம்ஹார விழா  நடைபெறும் 10-வது நாளில், பல்வேறு வேடங்கள் அணிந்து வருபவர்கள், குழுக்களாகச் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இதுவரை நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் மட்டும் நடந்துவந்தநிலையில், தற்போது  தமிழ், இந்தி சினிமா, டி.வி துணை நடிகர், நடிகைகளை அழைத்துவந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

முத்தாரமன் கோயில்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மும்பை மதுபானக்கூடங்களில் நடனமாடும் பெண்களை அழைத்துவருகின்றனர். பக்தர்கள் என்ற போர்வையில் அழைத்து வரப்படும் இவர்கள், பொது இடங்களில் ஆபாச நடனம் ஆடுவதுடன், அசிங்கமாகவும் நடந்துகொள்கின்றனர். இதனால், பக்தர்கள் வேதனைப்படுகிறார்கள். இந்த ஆண்டு தசராவிழா, செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது. அதில், பணத்துக்காக மதுக்கூடத்தில் ஆடும் அழகிகள், ஆபாசமாக ஆடும் டிவி, சினிமா நடிகர் நடிகைகள்  ஆடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவர். அவர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் உடையணிவர். ஒவ்வொரு பகுதியின் கலாசார நிகழ்ச்சியும் நடைபெறும். அவர்களின் கலாசாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், அந்த கலாசார நிகழ்ச்சிகளில் ஆபாசமாக நடனம் ஆடக்கூடாது. கலை எனும் பெயரில் ஆபாசம் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.