வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (23/09/2017)

கடைசி தொடர்பு:19:36 (23/09/2017)

''பதில் சொல்லக்கூடிய அதிகாரிகள்தான் கூட்டத்திற்கு வரவேண்டும்!'' விவசாயிகள் கூட்டத்தில் பெண் கலெக்டர் அதிரடி

'மழைவிட்டாலும் தூவானம் விட்டபாடில்லை' என்கிற பழமொழி,  இன்சூரன்ஸ் மற்றும் வறட்சி நிவாரணம் கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. விவசாயிகளும் வங்கிகளுக்குக் கால்கடுக்க நடையாய் நடந்து நொந்துகொண்டிருக்கும் அவலத்துக்குத் தீர்வுகாணும் கூட்டமாக அமைந்திருந்தது சிவகங்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம். 

லதா

சிவகங்கையில் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற லதா, ''மக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் அன்று ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரிகளும் அந்தக் கூட்டங்களுக்கு வரவேண்டும்'' என்று தன்னுடைய முதல் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.  இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பரபரப்போடு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு, விவசாயிகள் பெரும் நம்பிக்கையோடு அதிக அளவில் வந்திருந்தார்கள். அதேபோல அதிகாரிகளும் ஆஜராகியிருந்தார்கள். 

விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு, வறட்சி நிவாரணம் போன்றவைதான் தொடர்ந்து பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரிமியம் செலுத்திய விவசாயிகளுக்குக்  கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிகள் பொதுத் துறை வங்கிகளில் இன்சூரன்ஸ் தொகை வழங்குவதில் குளறுபடிகள் இடியாப்பச் சிக்கலில் இருந்துவருகின்றன. இது, புது மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பெரும்தலைவலியை உருவாக்கியிருக்கிறது. ''இன்சூரன்ஸுக்கு வழிசொல்லாமல் கூட்டம் நடத்துவது சாத்தியமாகாது என்றும், அதற்குப் பதில் சொல்லிவிட்டு அடுத்த சப்ஜெக்ட் பேசுங்கள்'' என்றும் விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தினார்கள். இன்சூரன்ஸ், வறட்சி நிவாரணம் இந்த இரண்டு பிரச்னைகளையும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சரி செய்து விடுவதாக விவசாயிகளிடம் உத்தரவாதம் அளித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர்.

திருப்புவனம் பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயி சேங்கைமாறன், ''நம்முடைய மாவட்டத்துக்கு 236 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகை வந்திருக்கிறது. ஆனால், மாவட்டம் முழுவதும் இன்சூரன்ஸ் வறட்சி பிரச்னையாகவே இருக்கிறது.சூராணம் பகுதியில் பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவே இல்லை. இந்தப் பகுதியில், நெல் விவசாயத்துக்கு அடுத்ததாக வளரக்கூடியது கரும்பு. இந்தக் கரும்பை 7,500 ஏக்கரில் பயிர்செய்து வருகிறோம். இந்த வருடம் கரும்பு, தூர்புழுவைத்து விவசாயத்தை அழித்துவிட்டது. கரும்புக்கு  எந்தவோர் ஆண்டும் இன்சூரன்ஸ் வழங்கப்பட்டதே இல்லை. கரும்பு விவசாயத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தாண்டு கரும்பு வெட்டி  சக்கரை ஆலைக்கு அனுப்பிவைத்துவிட்டோம். ஆனால், எங்களுக்குச் சேர வேண்டிய பணம் இந்த நாள் வரைக்கும் வழங்கப்படவில்லை. பயிர் இன்சூரன்ஸ் செலுத்தும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியை மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தென்னை மரங்கள் பட்டுப்போய் விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கிறோம். ஆடு வளர்ப்பதற்கு நம் மாவட்டம் சிறப்பானது. செம்மறி மற்றும் வெள்ளை ஆடுகள் வளர்ப்பதற்கு 30 சதவிகிதம் மானியம் பக்கத்து மாவட்டமான ராமநாதபுரத்தில் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. மாவட்டத்தில் 57ஆயிரம் தெரு நாய்கள் இருக்கின்றன. நாய்க்கடியால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்காக மத்திய அரசிடம் நிதிபெற்று வாரியம் அமைத்து நாய்களைப் பாதுகாக்கச் சொன்னோம். ஆனால், எந்த வேலையும் நடைபெறவில்லை'' என்றார்.

இவரைத் தொடர்ந்து மற்றொரு விவசாயி கன்னியப்பன் பேசும்போது, ''பழைய கலெக்டர், 'உப்புத் தண்ணியை நல்ல தண்ணியாக்கும் கருவி இருக்கு'னு சொன்னாங்க. அந்த மிஷின் விலை அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகங்க சொன்னாங்க. அந்த அளவுக்குப் பணம் கொடுத்து வாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. அதனால மானிய விலையில அந்த மிஷினை வழங்கணும் '' என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

லதா

திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், “வேலியே பயிரை மேய்ந்த கதையாகக்  கண்மாய்க்குள் கட்டப்பட்டுள்ள  கோயில் வீடுகளை அகற்றாமல் கண்மாய்க்கு வரக்கூடிய கால்வாய்களைத் தூர்வாராமலும் இருக்கிறார்கள். பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நீர்ப்பிடிப்புப் பகுதியில் எந்தக் கட்டடங்களும் இருக்கக்கூடாது என்கிற உத்தரவு இருந்தும் அதையெல்லாம் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை'' என்றார். 

அதைக் கேட்டு அதிகாரிகள் பக்கம் திரும்பிய கலெக்டர், ''அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடாதீர்கள். சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்'' என எச்சரிக்கை செய்தார்.

ராமலிங்கம் விவசாயி பேசும் போது, ''கரும்புக்கான இன்சூரன்ஸும் கிடைக்கலை. கொடுத்த கரும்புக்குப் பணமும் வரலை. 'நாங்க நாலு ஏக்கர் அஞ்சு ஏக்கர் கரும்பு விவசாயம் பண்ணுறோம்'னு வெளியில பெருமைக்குத்தான் சொல்றோம். ஆனா, எங்களை நம்பி டீக்கடைக்காரன்கூட இப்ப கடன்தர யோசிக்கிறான். அவனும் எவ்வளவு நாள்தான் கடன் தருவான்? எங்க நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்குது. திருப்புவனம் அருகே ஏனாதி கிராமத்தில் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கு டெண்டர் போட்டு இன்னும் கட்டப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் பொருள்கள் சப்ளை செய்ய லாரி வாடகை 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஏனாதியில், குடோன் கட்டப்பட்டால் மாதம் லாரி வாடகையே பத்தாயிரம் ரூபாய்தான் வரும்'' என்றார். 

இதற்கான கேள்வி எழுந்தபோது பதில் சொல்வதற்கு சிவில் சப்ளை மண்டல மேலாளர் வரவில்லை. அவருக்குப் பதிலாக கிளார்க் வந்திருந்தார். அவரிடம்... மாவட்ட ஆட்சியர், ''உங்கள் ஆர்.எம் எங்கே போனார்'' என்று கேட்டார். ''அவர், லீவும்மா'' என்றார் கிளார்க். ''எனக்கு லீவுலெட்டர் வரலையே. எம்.டி-க்கு அனுப்பிட்டாரு. சரி, லீவுலெட்டர் நகலோடு என்னைவந்து பார்க்கச் சொல்லுங்க. 'குடோன் ஏன் கட்டலைங்கிறதுக்கான பைல் எடுத்துட்டு வரணும்'னு சொல்லுங்க. இனி வரக்கூடிய கூட்டங்களுக்கு அதிகாரிகள் அளவில் பதில் சொல்லக்கூடியவர்கள்தான் வரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்,  ''அதிகாரிகள் கடமையைச் செய்கிறார்கள். அதற்கான கேள்விகள்தான் இங்கு கேட்கப்படுகின்றன. அதற்காக யாரும் கைதட்டுவது எனக்குப் பிடிக்காது. இது, தவறானது. இந்தப் பழக்கம் இனி தொடரக்கூடாது'' என விவசாயிகளுக்கும் எச்சரிக்கை செய்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க