Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் நியமனம்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக பகீர் புகார்!

அங்கன்வாடி பணியாளர் ஊழல்

நெல்லை மாவட்டத்தில் நடந்த அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் புகார்தாரர்கள் வலியுறுத்தினர். 

நெல்லை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் காலியாக இருந்த 1,605 பணியிடங்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அங்கன்வாடி உதவியாளர், குறுஅங்கன்வாடி பணியாளர் மற்றும் முதன்மை அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு நடந்த இந்த நேர்முகத் தேர்வில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக எஸ்.சி., எஸ்.டி அலுவலர் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள்

இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநில துணைத் தலைவரான முத்தாரப்பன் கூறுகையில், ’’நெல்லை மாவட்டத்தில் நடந்த அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றன. இதில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. எல்லாத் தகுதியும் இருந்தும் பணம் கொடுக்க வசதியில்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊழல் அதிகாரிகளால் பணி  நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. 

எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மட்டுமல்லாமல் பொதுப்பிரிவினரும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விதவைகள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் என பலரது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு உள்ளன. சிலருக்கு தகுதி இருந்தும் லஞ்சப்பணம் கொடுக்க முடியாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப தேதி முடிந்த பின்னரும் பணம் பெற்றுக் கொண்டு பழைய தேதியிட்டு விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பமே கொடுக்காதவருக்கு கூட போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு ஆணை வழங்கிய விந்தையும் நடந்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஒரே இடத்தில் இரண்டு நபருக்கு பணி நியமன ஆணை வழங்கிய கூத்தும் நடந்துள்ளது. அதில், பணம் கொடுத்தவரை மட்டுமே பணியில் சேர அனுமதித்த அதிகாரிகள் மற்றவரை சேரவிடவில்லை. ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் ரூ.3 லட்சம் வரை கையூட்டு பெறப்பட்டு பணி வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.அதிகாரிகளுக்கிடையே தொலைபேசி பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது. அதன் பதிவை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கொடுக்க உள்ளோம். தற்போது நிரப்பப்பட்ட பணி இடங்களை நீக்கம் செய்துபிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் தழுவிய அறப்போராட்டம் நடத்துவோம்’’ என்றார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement