'கால் போனது ஒரு பக்கம்.. காசு வராதது ஒரு பக்கம்' - தொடரும் சோமனூர் விபத்து சோகம்!

சோமனூர் பேருந்து நிலைய விபத்து

"எம் பொண்ணு பேரு லாதா.  இருபது வயசுதாங்க ஆவுது. வாழ வேண்டிய பொண்ணு. படிச்சி பெரிய ஆளா வருவா, நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு எவ்வளவோ கனவுல இருந்தோம். கடந்த 7-ம் தேதி, பரீட்சை எழுதறதுக்காக காலேஜுக்கு போனவளை ஆஸ்பத்திரியில  ஒரு கால் இல்லாமதான் பாக்க முடிஞ்சது. அரசாங்கம் தரமில்லாம கட்டுன பஸ்டாண்டால என் பொண்ணோட வாழ்க்கையே போச்சுங்க. எங்க ஆயுசுக்கும் சந்தோஷம்ங்கிற பேச்சுக்கே இடமில்லாம போச்சுங்க" ஆரம்பிப்பதற்குள்ளாகவே  கழுக்கென்று கண்ணீர் பொங்க… தொண்டை அடைக்கிறது நாராயணசாமிக்கு.

கடந்த 7ம் தேதி, கோவையை அடுத்துள்ள சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். அரசு தரமில்லாமல் கட்டியதால் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து ஐந்து அப்பாவிகளை  பலி கொண்டது. பலர் படுகாயம் அடைந்தார்கள். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் என வழக்கம்போல,  நிவாரணத்தொகையை அறிவித்து நீலிக்கண்ணீர் வடித்தது தமிழக  அரசு. விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து  தண்டிக்காமல் நிவாரணம் என்ற பெயரில் ஏழை மக்களின் உயிருக்கு விலை பேசுகிறது தமிழக அரசு என்ற வாதம் ஒருபுறமிருந்தாலும். இப்போது, கிளம்பியிருக்கும் புகார் இன்னும்  கேவலமானதாக இருக்கிறது. 

விபத்து நடந்த அடுத்த நாளான 8-ம்தேதி,   விபத்தில் சிக்கி கோவை ரிச்மாண்ட்  மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகளை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால், சொல்லிவிட்டு போனதோடு சரி… பணமும் கட்டவில்லை ஒண்ணும் கட்டவில்லை. மருத்துவமனைக்கு பணம் கட்ட முடியாததால் அங்கு சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் குதித்துவிட்டார்கள். அதில் ஒருவர்தான் நாராயணசாமி.

சோமனூர் பேருந்து நிலைய விபத்து

நாராயணசாமிக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம், " என் பொண்ண இந்த ஆஸ்பத்திரியிலதான் சேர்த்துருக்காங்கன்னே முதல்ல என்னக்கு தெரியாது. கவர்மென்டு ஆஸ்பத்திரியிலதான் முதல்ல போய் தேடுனோம். அங்க இல்ல. அப்புறம்தான்,  இந்த ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்ததால இங்கயே சேத்துட்டாங்கனு தெரிஞ்சது. எம் மகள ஒரு கால் இல்லாம பார்த்ததும்  எப்படியாவது காப்பாத்திட்டா போதும்னுதான் தோணுச்சே ஒழிய,  எனக்கு காசு நெனைப்பெல்லாம் வரவே இல்லை.  மறுநாள் அடிபட்டவங்களையெல்லாம் பாக்குறதுக்கு அமைச்சர் வேலுமணி வந்தார்.  'கவலைப்படாதீங்க மருத்துவ செலவை நாங்களே பாத்துக்குறோம்னு சொன்னார்.'  அது ஓரளவுக்கு எங்களுக்கு தெம்ப கொடுத்துச்சி. ஆனால், திடீர்னு ரெண்டே நாள்ல ஆபரேஷன் பண்ணணும்னு லட்சக்கணக்குல ஆஸ்பத்திரி நிர்வாகம்  பணம் கட்ட சொல்லிச்சி.நாங்க பதறிட்டோம்.

அரசாங்கமே கட்டிரும்னு அமைச்சர் சொன்னாரே'ன்னு கேட்டோம். அவுங்க பணமெல்லாம்  கட்டல.  உங்ககிட்ட வாய் வார்த்தையா சொன்னதெல்லாம் நாங்க ஏத்துக்க முடியாது'னு ஆஸ்பத்திரி நிர்வாகம் சொல்லிருச்சி. எனக்கு என் மகள காப்பாத்தியாகணுமேங்குற பதற்றம். அவுங்ககிட்ட சண்ட போட முடியுமா? இல்லை அமைச்சரைத் தேடி ஓட முடியுமா? இவங்களை நம்பினா பிரயோஜனப்படாதுனு. எனக்கு தெரிஞ்சவங்க கையில் கால்லையெல்லாம் விழுந்து கடனவுடன வாங்கி இதுவரைக்கும் 3 லட்சம் ரூபாய் கட்டிருக்கேன். நான் தறி வேலை செய்யுற சாதாரண கூலித்தொழிலாளிங்க. அவ்வளவு கடனை நான் எப்படி அடைக்க போறேன்னே தெரியல. எம் பொண்ணு படிச்ச காலேஜ் புள்ளைங்களெல்லாம் நெறய உதவி பண்ணிருக்காங்க. அவுங்க எல்லா இல்லைன்னா எம் பொண்ணை காப்பாத்திருக்கவே முடியாது. எம் பொண்ணோட இந்த நிலமைக்கு காரணம் அரசாங்கம்தான். ஆனா, வெறும் 50,000 நிவாரணம் கொடுத்து கழிச்சி கட்டிருச்சி இந்த அரசாங்கம். ஒத்த கால் இல்லாத மகளை நாங்க எப்படி கரை சேர்க்க போறோம்னே தெரியலங்க. எங்களுக்குப் பிறகு அவளோட வாழ்க்கை என்னாகும்ங்கிற வேதனையிலேயே நாங்க சீக்கிரம் செத்து பேயிருவோம். இதுக்கு ஒரு வழிய இந்த அரசாங்கம் சொல்லியே ஆகணும்" என்று கையெடுத்துக்கும்பிடுகிறார் நாராயணசாமி.

லதா மட்டுமல்ல, இன்னும் இரண்டுபேர் அதே மருத்துவமனையில்  பெற்ற சிகிச்சைக்கு கடன் வாங்கி பணம் கட்டிவிட்டு கண்ணீரோடு நிற்கிறார்கள். ஆனால், அதற்கு காரணமான அரசாங்கம் கண்டுகொள்ளாமல் போகிறது.

இவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் பதில் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!