Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்' - டி.ஜி.பி ராஜேந்திரன்

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என திருச்சியில்  டி.ஜி.பி ராஜேந்திரன் கூறினார்.

டி.ஜி.பி.ராஜேந்திரன்திருச்சியில் தமிழக காவல்துறை இயக்குநரான டி.கே. ராஜேந்திரன், தமிழகம் முழுவதும் உள்ள மண்டலங்கள் வாரியாக நேரில் சென்று, தமிழக போலீஸாரின் குறைகளை கேட்டு வருகிறார். கடந்தவாரம் அவர் முதன்முதலாக மதுரை மண்டல போலீஸாரின் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மத்திய மண்டல போலீசாரின் குறைகளை டி.ஜி.பி ராஜேந்திரன் கேட்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி, தமிழக முதல்வர் மயிலாடுதுறை வருகை, நாகப்பட்டினம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளினால் ரத்து செய்யப்பட்டது.

அடுத்து இன்று காலை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீஸார், மற்றும் அதிகாரிகள் தங்களின் குறைகள் அடங்கிய மனுக்களுடன் காத்திருந்தனர். அவர்கள் மத்தியில் ஐஜி.வரதராஜு, திருச்சி மாநகர கமிஷ்னர் அருண், திருச்சி டி.ஐ.ஜி பவானீஸ்வரி மற்றும் தஞ்சாவூர் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் சகிதமாக போலீஸாரை சந்தித்த டி.ஜி.பி ராஜேந்திரன், அவர்களிடம் மனுக்கள் வாங்கினர்.

மேடையில் பேசிய திருச்சி மாநகர கமிஷ்னர் அருண்,

“தமிழகம் முழுக்க, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை, நமது இயக்குநர் செய்து வருகின்றார். பல நேரங்களில், பணிச்சுமை காரணமாக பல நெருக்கடியான சூழலுக்கு நாம் ஆளாக நேரிடுவது உண்மைதான். மேலும் இப்போதுள்ள முறையை விட மூன்று ஷிப்ட் முறை இருந்தால் கொஞ்சம் சரியாக இருக்கும். நமக்கென சங்கங்கள் இல்லை அதனால், நேரடியாக இயக்குநர் குறைகளைக் கேட்க நேரில் வந்துள்ளார். காவலர்களின் குறைகளை நிச்சயம் இயக்குநர் நிவர்த்தி செய்வார்” என்றார்.

தொடர்ந்து போலீஸாரிடம் மனுக்கள் வாங்கிய டி.ஜி.பி ராஜேந்திரன்,

“மதுரை மற்றும் திருச்சியை தொடர்ந்து மண்டலம் வாரியாக காவலர் குறைகளை வாங்கி வருகின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக காவல் பணியில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களுக்கான தேர்வில், தேர்வானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் அனைத்து நடைமுறைகளும் முடியும். அடுத்து காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும். அதேபோல அனிதா மரணம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் என்ன அறிக்கை கேட்டாலும் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்“ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement