வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (24/09/2017)

கடைசி தொடர்பு:00:30 (24/09/2017)

'நடிகர்கள் தங்களது புகழ்ச்சியை வைத்து அரசியலுக்கு வந்தால் வீழ்த்தப்படுவார்கள்' - திருமுருகன் காந்தி!

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக, மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயற்சி செய்த மே  17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி,  டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருமுருகன் காந்தி

இந்நிலையில், தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தியாகராய நகரில் நடைபெற்றது. இதில், திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, "ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக வந்த, நடிகர்கள் யாருடனும் எங்கள் இளைஞர்கள் போட்டோ கூட எடுக்கவில்லை. அவர்களை நாங்கள் பெரிதாக பார்க்கவில்லை. நடிகர் என்ற புகழ்ச்சியை மட்டும் வைத்து அரசியலுக்குள் வந்தால் கண்டிப்பாக அவர்கள் தோல்வியை தழுவுவார்கள். எங்களுடைய அன்றாட போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள்.

திருமுருகன் காந்தி

ஏற்கெனவே, இதுபோன்ற விஷயங்களால் 40 ஆண்டு காலமாக தமிழகம் பின்தங்கியுள்ளது. மீண்டும் இது போன்ற செயல்களை செய்து தமிழகத்தை சீரழிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். எது சரியான அரசியல் என்று மக்கள் புரிந்து கொண்டார்கள் என்றால், அதிகாரம் மக்களிடம் வரும். 

கறுப்பு சட்டை போடக்கூட உரிமை இல்லாமல் இருக்கிறது. கடற்கரையில் கூட்டம் நடத்த முடிவதில்லை. இந்த அடிமைத்தனத்தில் இருந்து, தமிழகத்தின் உரிமைகளை எப்படி நிலை நிறுத்துவது என்பது குறித்து அனைவரும் ஒன்றிணைந்து முடிவு எடுக்க வேண்டும்" என்று கூறினார்.