வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (24/09/2017)

கடைசி தொடர்பு:14:34 (24/09/2017)

ஜெயலலிதா மரணத்தில் தொடரும் புதிர்கள்! சாமானியர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமா தமிழக அரசு?

ஜெயலலிதா

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்து விட்டது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பாமல் கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர்  மறைந்துவிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அண்மையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது வரை ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக சாதாரண மக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறார்கள்.  ஆனாலும்  அவரது மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்களும் அதுகுறித்த ரகசியமும் ஒரு சில தனிநபர்களால் பாதுகாக்கப்படுகின்றன. ஜெயலலிதாவின் மரணத்துக்கு விடை சொல்ல வேண்டிய தமிழக அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது.

இப்படியெல்லாம் சொன்னார்கள்

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா! அன்றைய தினத்திலிருந்தே ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன. ஆனால், அ.தி.மு.க அமைச்சர்களோ, 'அம்மா இட்லி சாப்பிடுகிறார்; பேப்பர் படிக்கிறார்; அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்' என்றெல்லாம் செய்தியாளர்களுக்கு அப்போலோ வாசலில் பேட்டி மட்டும் கொடுத்துச் சென்றனர். கூடவே, 'உயர் சிகிச்சையில் இருப்பவர் ஒரு பெண்.  அதனால் புகைப்படமெல்லாம் வெளியிடமுடியாது. மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி நோயாளியின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வெளியிடமுடியாது' என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. 

இந்நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி 'சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா இறந்துவிட்டார்' என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஜெ. மரணம் குறித்த சந்தேகங்கள் அரசியல் அரங்கில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் எழுப்பப்பட்டன. ஆனாலும், புதிய முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில் மட்டுமே ஆளும் தரப்பு முழு கவனத்தையும் செலுத்தியது.

விசாரணை எப்போது?

இதில், திடீர் திருப்பமாக, கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமே போர்க்கொடி தூக்கவும் மறுபடியும் ஜெ. மர்ம மரணம் குறித்த சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், ஓ.பி.எஸ் தரப்பு, 'ஜெ. மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். காலமாற்றத்தில், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கைகோத்து ஒரே அணியாக மாறினர். அவர்களுக்கு எதிர் அணியாக மாறிப்போனார் டி.டி.வி தினகரன். எனவே, 'ஜெ. மரணம் குறித்து விசாரணைக் கமிஷன்' அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி. அறிவிப்பு வெளியானதோடு சரி... அடுத்தக்கட்ட நகர்வு சிறிதும் இல்லாமல் கிணற்றில் விழுந்த கல்லாகிப்போனது விசாரணைக் கமிஷன் விவகாரம். 

இப்போது, ஜெ. மரணம் அடைந்து வருடம் ஒன்றைக் கடந்துவிட்ட சூழலில், மறுபடியும் ஜெ. மரணம் குறித்த சர்ச்சைக்கு திரி கிள்ளியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர், ''ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்றெல்லாம் நாங்கள் கூறியது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள். ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தை விசாரணை கமிஷன்தான் வெளிப்படுத்த வேண்டும்.'' என்று மறுபடியும் மர்ம மரணம் குறித்து கேள்வி எழுப்பி அரசியல் அரங்கில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறார்.

சசிகலா தினகரன்

இதற்கு எதிர்வினையாக, டி.டி.வி தினகரனும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராகப் பேட்டி தட்டியுள்ளார். இது இவர்களுக்கு அரசியல். உண்மையில் ஜெயலலிதா மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மம்தான் என்ன? என்பது குறித்த விசாரணையில் சாமான்யனுக்கு எழும் விடை தெரியாக் கேள்விகள் இங்கே...

(1) ஜெ. மரணத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக இப்போது குற்றம் சாட்டும் அமைச்சர்கள் இவ்வளவு நாட்களாக, இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் இருந்தது ஏன்?

(2)சசிகலா குடும்பத்தினர் பற்றிய 90 விழுக்காடு உண்மைகள் தன்னிடம் இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அந்த 90 விழுக்காட்டில், ஜெ. மரணம் குறித்த ரகசியங்களும் அடங்கியிருக்கிறதா?

(3)அப்போலோ சிகிச்சை விவகாரங்கள் அனைத்தும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக இப்போது குற்றம் சுமத்தப்படுகிறது. அப்படியென்றால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களும் சசிகலாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்கமுடியுமா?

(4)அப்போலோவில் சி.சி.டி.வி பதிவுகளே கிடையாது என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜெ. சிகிச்சை பெறும் சி.சி.டி.வி பதிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில் எது உண்மை?

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்.

(5)இப்படியொரு பதிவு இருக்குமேயானால், இத்தனை நாட்களாக 'ஆதாரம் எதுவும் கிடையாது' என்று பொய் சொல்லி மறைத்து வைத்திருந்தது ஏன்?

(6)ஜெ.மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்த ஆட்சியாளர்கள் இன்னமும் கமிஷன் அமைக்காமல் மவுனம் காப்பது ஏன்?

(7)எய்ம்ஸ் மருத்துவர்கள் வாயிலாக உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு மத்திய அரசுக்கு இருக்கும்போது, அவர்களும் இவ்விஷயத்தில் உண்மை நிலையைத் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? 

- இப்படி பலதரப்பட்ட சந்தேகக் கேள்விகள் எழுகின்றன. விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு சுதந்திரமான விசாரணை நடைபெற்று, அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போதே இந்தக் கேள்விகளுக்கான விடைகளும் தெரியவரும். அதுவரை இதெல்லாம் அரசியலாகவே கடந்துபோகும்!

 


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை