'கிரண்பேடி செய்தியை வெளியிடும் பத்திரிகைகள் மீது வழக்கு' – முதல்வர் நாராயணசாமி

”சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண் பேடி தெரிவிக்கும் தகவல்களை ஆராயாமல் வெளியிடும் பத்திரிகைகள் மீது வழக்குப் போடப்படும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரண்பேடி

சென்டாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இந்நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடில் ஈடுபட்டதாக புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குனர் மற்றும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்ற நிலையில், வழக்கம்போல இந்த விவகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

கிரண்பேடி

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “சென்டாக் கலந்தாய்வு சரியாக நடைபெறவில்லை என்றால் மாநில அரசின் கவனத்துக்குதான் ஆளுநர் கொண்டுவர வேண்டும். ஆளுநர் நேரிடையாக சென்றது மிகப்பெரிய தவறு. ஆளுநராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் கிரண்பேடி. அதிகாரிகளை மிரட்டி பொய்யான வாக்குமூலம் பெற்று அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். ஆளுநர் உள்நோக்கத்தோடு கலங்கம் விளைவிக்க இந்த வேலையை செய்து வருகிறார்.  சென்டாக் கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு செல்லும் அதிகாரத்தை ஆளுநருக்கு  யார் கொடுத்தது?  ஆளுநர் அதிகாரிகளை தூண்டுவிடுவது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றோம். தேவைப்பட்டால் ஆளுநர்  மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம். அதேபோல சமூக வலைதளங்களில் கவர்னர் தெரிவிக்கும் தகவல்களை ஆராயாமல் வெளியிடும் பத்திரிகைகளும் அந்த வழக்கில் சேர்க்கப்படுவார்கள்” என்று ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!